இத்தாலியின் இலங்கை பெண்ணின் கொடூர செயல் - 29 வருடங்கள் சிறைத்தண்டனை
இத்தாலிக்கு வீட்டு பணியாளரான சென்ற இலங்கை பெண் ஒருவர் கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் 21 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரோம் நகரில் வீடொன்றில் முதியவரை கவனிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 33 வயதான பெண்ணே முதியரை கொலை செய்துள்ளார்.
பணிப் பெண்ணிடம் கோப்பி கேட்டதற்காக, முதியவரை மிகக் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளார்.
வீட்டுப் பணிப்பெண்
உயிரிழந்தவர் 94 வயதான நிக்கோலோ கரோனியா எனும் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி ஆவார். உயிரிழந்தவர் இத்தாலிய பொலிஸ் துறையில் மிக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 2ஆம் திகதி நடந்த இந்தச் சம்பவத்தின் போது, நிக்கோலோ கரோனியா கோப்பி தருமாறு தனது வீட்டுப் பணிப்பெண்ணிடம் கேட்டுள்ளார்.
எனினும் குறித்த பெண் மதுபோதையில் இருந்தமையினால் கோப்பி வழங்க மறுத்து தகராறு செய்துள்ளார். மனமுடைந்த முதியவர் தானே எழுந்து கோப்பி போட முயன்றபோது, ஆத்திரமடைந்த இலங்கைப் பெண் அவரை தாக்கியுள்ளார்.
கைகள், முழங்கைகள் மற்றும் கால்களால் முதியவரின் தலை மற்றும் முகம் என உடல் முழுவதும் பலமாக தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதியவரை தாக்கியதுடன் வீட்டில் இருந்த பொலிஸ் கௌரவச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் மீது துப்பி அவமரியாதை செய்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
திட்டமிட்ட கொலை
பின்னர் முதியவரை படுக்கையில் தள்ளிய நிலையில் தனது அறைக்குச் சென்றுள்ளார். நிக்கோலோவின் மகன் பேப்ரிசியோ தனது தந்தையைத் தொலைபேசியில் அழைக்க முயன்றபோது பலமுறை பதில் கிடைக்கவில்லை.

ஒருகட்டத்தில் பணியாளரான இலங்கை பெண் பதிலளித்தபோது, பின்னணியில் தனது தந்தை வலியால் முனகுவதைக் கேட்டு சந்தேகமடைந்த மகன் உடனடியாக வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, தந்தை மிக மோசமான நிலையில் காணப்பட்டுள்ளார்.
உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சுமார் இரண்டு மாதங்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் போராடிய நிக்கோலோ, ஒகஸ்ட் 27ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பில் ஆரம்பத்தில் கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் பின்னர் திட்டமிட்ட கொலை' வழக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ரோம் நீதிமன்றம், குற்றவாளியான இலங்கை பெண்ணுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.