இலங்கை குடும்பத்தினருக்காக போராடிய அவுஸ்திரேலிய மக்கள்
அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான கிறிஸ்மஸ் தீவில் உள்ள முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையை சேர்ந்த குடும்பத்தை விடுதலை செய்யுமாறு அவுஸ்திரேலிய மக்கள் நடத்திய போராட்டத்தை அடுத்து, அவுஸ்திரேலிய அரசாங்கம் அந்த குடும்பத்தினரை நாட்டுக்குள் அழைத்து வந்துள்ளது.
இரண்டு மகள்கள், தாய், தந்தை ஆகிய இந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டனர்.
இளைய மகளுக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக அந்த பிள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்தே அந்த குடும்பத்தினரை விடுதலை செய்யுமாறு அவுஸ்திரேலிய மக்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க தொடங்கினர்.
எனினும் தற்காலிகமாக இந்த குடும்பத்தினரை அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது.
அகதிகளாக படகுகளில் அவுஸ்திரேலியாவுக்கு அனுமதியின்றி நுழைய முயற்சிக்கும் நாட்டிற்குள் அனுமதிப்பதில்லை என கொண்டு வரப்ப்ட்டுள்ள சட்டத்தை தளர்த்த போவதில்லை என அரசாங்கம் கூறியுள்ளது.
இந்த கடுமையான தீர்மானம் காரணமாக இலங்கையை சேர்ந்த இந்த குடும்பத்தினரின் எதிர்காலம் கேள்விக்குரியாகியுள்ளது. இந்த குடும்பத்தை சேர்ந்த 4 வயதான சிறுமிக்கு நிமோனியா நோய் ஏற்பட்டுள்ளதுடன் சரியான சிகிச்சை கிடைக்காத காரணத்தினால், இரத்தம் விஷமாகியுள்ளது.
இந்த செய்தி வெளியானதை அடுத்து அவுஸ்திரேலிய மக்கள் அந்நாட்டு அரசாங்கத்திற்கு கடும் எதிர்ப்பை முன்வைத்துள்ளனர்.
இதனையடுத்து சிறுமி மற்றும் அவரது தாயாருக்கு அவுஸ்திரேலியாவுக்குள் வர அனுமதி வழங்கப்பட்டதுடன் பேர்த் நகரில் உள்ள வைத்தியசாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார்.
இலங்கையை சேர்ந்த இந்த குடும்பத்தினர் அவுஸ்திரேலியாவின் பிலோலா பிரதேசத்தில் வசித்து வந்ததால், அவர்களை அவுஸ்திரேலிய மக்கள் பிலேலா குடும்பம் என அழைக்கின்றனர்.
அவுஸ்திரேலிய கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசாங்கம் இந்த குடும்பத்தினர் தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த குடும்பத்தினருக்கு குடியேற்ற சட்டத்தில் தளர்வை ஏற்படுத்தினால், அந்த சட்டம் தொடர்பில் நெருக்கடி ஏற்படும் என அரசாங்கம் கூறியுள்ளது எனினும் மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக சட்டத்தை தளர்த்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
சிறுமியின் தந்தையான நடேசலிங்கம் முருகப்பன் கடந்த 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளதுடன் அங்கு திருமணம் செய்துக்கொண்டுள்ளார் இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்துள்ளன.
இவ்வாறான நிலைமையில் குடும்பத்தினர் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி விண்ணப்பத்துள்ளனர் இலங்கையில் இருந்து யுத்தம் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு தப்பி வந்ததாக குடும்பத்தினர் கூறியிருந்தனர்.
எனினும் அவுஸ்திரேலிய அரசாங்கம் அவர்களின் தஞ்ச விண்ணப்பத்தை நிராகரித்திருந்தது அத்துடன் அவர்களை 2018 ஆம் ஆண்டு இலங்கைக்கு நாடு கடத்துமாறும் அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் நாடு கடத்தும் உத்தரவை அவுஸ்திரேலிய நீதிமன்றம் இடைநிறுத்தியது இதன் பின்னர் அந்த குடும்பத்தினர் அவுஸ்திரேலியாவில் இருந்து ஆயிரத்து 550 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கிறிஸ்மஸ் தீவில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.