அவுஸ்திரேலியாவில் மனைவியை கொடூரமாக தாக்கி விபத்தை ஏற்படுத்திய இலங்கையருக்கு விசா
அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் நாடு கடத்தலில் இருந்து தப்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தனது குடும்பத்தினரின் உயிரிழப்புக்கு காரணமான விபத்து மற்றும் மனைவியை தாக்கிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இலங்கையர் நாடு கடத்தலில் இருந்து தப்பியுள்ளார்.
42 வயதான தரங்க எஹலபே கமகே என்ற இலங்கையரின் விசா இரத்து செய்யப்பட்ட நிலையில், நிர்வாக மறுஆய்வு தீர்ப்பாயம் அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.
நாடு கடத்தல்
கடந்த 2019ஆம் ஆண்டு தரங்க ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதில், அவரது ஐந்து வயது மகள் மற்றும் 70 வயதுடைய தாய் ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து தொடர்பாக கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக அவருக்கு 2022 ஆம் ஆண்டு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
12 மாதங்களுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றதால், அவுஸ்திரேலியக் குடிவரவு சட்டத்திற்கமைய, அவரது வதிவிட விசா இரத்து செய்யப்பட்டது.
எனினும் இந்த விசா ரத்துக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த தீர்ப்பாய உறுப்பினர் ஜான் ராவ், இலங்கையரின் வதிவிட உரிமையை மீண்டும் வழங்கியுள்ளார்.
விசா வழங்க அனுமதி
விபத்திற்கு மேலதிகமாக அவருக்கு எதிராக இருந்த குடும்ப வன்முறைப் பின்னணி இந்த வழக்கில் பெரும் சவாலாகியுள்ளது. அவர் தனது மனைவியைத் தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தாக்கியது மற்றும் முகத்தில் குத்தியது போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

விசாரணையின் போது, தான் இனிமேல் வன்முறையில் ஈடுபடமாட்டேன் எனவும் தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்து வாழ விரும்புவதாகவும் அவர் உறுதியளித்தார்.
இந்த நிலையில் அவரது மனைவியும் அவருக்கு ஆதரவாகக் கடிதம் எழுதியிருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாய உறுப்பினர், அவரது வார்த்தைகளை நான் நம்புகிறேன் எனக் கூறி, அவர் மீண்டும் வன்முறையில் ஈடுபட வாய்ப்பு மிகக் குறைவு என்ற அடிப்படையில் விசா வழங்க அனுமதி வழங்கியுள்ளார்.
இந்தத் தீர்ப்பு அவுஸ்திரேலியாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வன்முறைப் பின்னணி கொண்ட ஒருவருக்கு மீண்டும் விசா வழங்கப்பட்டது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.