இலங்கைத் தேர்தல்களும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையும்
உயிரிகளின் வாழ்வு இடையறாது போராடுவதன் மூலமே நிலைபெறுகிறது. போராடாத எந்த உயிரினமும் இந்த பூமிப்பந்தில் நிலைபெற முடியாது. இது மனிதனுக்கும் பொருந்தும். போராடாத இனம் அழிந்தே தீரும். இதனை ""தக்கென பிழைக்கும்"" என கூர்ப்பியல் வலியுறுத்தி கூறுகிறது. அதாவது காலத்திற்கும், சூழலுக்கும் பொருத்தமாக தம்மை தகவமைத்துக் கொள்ளாத உயிரிகள் அழிந்து விடும்.
இதனை நியண்டதால் மனித இனம் தொடக்கம் அமெரிக்க கண்டத்தின் மாயா, இன்கா மக்கள் வரை அழிந்த வரலாற்றை எம் கண்முன்னே கண்டோம். "உன்னை நீ கைவிட்டு விட்டால் உன்னை கடவுளாலும் காப்பாற்ற முடியாது" என்ற பிரான்ஸிய பழமொழியை இப்போது தமிழ் மக்கள் தம் மனதில் ஆழமாக நிலைநிறுத்தி செயற்பட வேண்டிய சூழல் தோன்றி விட்டது.
இதனை தமிழ் அரசியல் கருத்து உருவாக்கிகளும், அரசியல்வாதிகளும், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களும் கருத்தில் கொள்ள வேண்டும். இயற்கைக்கும் மனிதனுக்குமான போராட்டமும், மனிதனுக்கும் மனிதனுக்குமான போராட்டமும், நாடுகளுக்கும் நாடுகளுக்கு இடையிலான போராட்டமும், தேசிய இனங்களுக்கு இடையிலான போராட்டங்கள் எப்போதும் தவிர்க்க முடியாதவை.
இவை தொடர்ந்து நிகழும். மனித இனம் இந்த பூமியில் வாழும் வரை போராட்டங்கள் தவிர்க்க முடியாதவை எனவே போராடித்தான் மனிதன் வாழ வேண்டும். இதற்குத் தமிழ் மக்கள் மட்டும் விதிவிலக்கு அல்ல.
இரண்டாம் உலகப் போர்
போராடுவதனால் நாம் அழிந்து விடுவோம், அல்லது பாதிப்படைவோம், எதையும் பெற மாட்டோம் என எண்ணுவதும், கூறுவதும் சோம்பேறித்தனத்தின் உச்சம். அறிவியல் சீரழிவின் ஆரம்பம் என்றே கருத வேண்டும்.
தாயின் மார்பில் பாலுாட்டும் குழந்தையும் போராடியே பாலூட்டுகிறது. பசுவின் கன்றும் பசுவின் மடியை முட்டி மோதியே பால் குடிக்கிறது. போராடாமல் எதையும் மனிதனால் பெற முடியாது. அரசியலில் போராடாமல் உரிமையும் கிடையாது, பங்கும், பாத்திரமும் கிடையாது.
எனவே நம்பிக்கையோடு போராடினால் மட்டுமே வாழ்வு. நம்பிக்கை இழந்தவன் பிரேதப்பட்டியில் படுத்திருக்கும் சடலம் ஆவான். தமிழ் மக்கள் தாம் இழந்த இறைமையை மீட்டெடுப்போம் என்ற நம்பிக்கையை கைவிட்டால், அல்லது அதில் ஒரு தளர்வு ஏற்பட்டால் தமிழினத்திற்கு விடுதலை கிடையாது.
விடுதலைக்கான தகுதியும் கிடையாது. தம்மை தேசிய இனம் என அழைக்கும் தகுதியையும் இழப்பர். மக்களின் நம்பிக்கைதான் இருப்பைத் தீர்மானிக்கிறது, நிர்ணயம் செய்கிறது. இந்த நம்பிக்கைதான் மக்களிடையே பொது அபிப்பிராயத்தை (Public opinion) ஏற்படுத்துகிறது.
பொது அபிப்பிராயம்தான் அம்மக்களின் அரசியல் விருப்பாக (Political Will of the people) வெளிப்படும். மக்கள் கூட்டத்தின் அரசியல் விருப்பே அந்த மக்கள் கூட்டத்தின் அறிவியல் வளர்ச்சிக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும், பொருளியல் வளர்ச்சிக்கும், அதன் மேன்மைக்கும் அடித்தளமாகவும், நிர்ணய சக்தியாகவும் விளங்குகிறது.
இரண்டாம் உலகப் போரில் தோற்கடிக்கப்பட்ட ஜப்பானும், ஜேர்மனியும் இன்று உலகின் முதல்தர பொருளியல் தொழிநுட்ப சக்தியாக விளங்குகின்றன. அவை தாம் தோற்கடிக்கப்பட்ட இடத்திலிருந்து வளர்ச்சிக்கான பாதையை நம்பிக்கையோடு முன்னெடுத்தன. இந்த முன்னுதாரணம் முள்ளிவாய்க்காலில் வீழ்த்தப்பட்ட தமிழ் மக்களுக்கு அவசியமானது.
யாரோடு கூட்டிச்சேர்ந்து, யாரை பயன்படுத்தி, எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். அத்தகைய அரசியல் தீர்க்கதரிசனம் மிக்க கருத்துருவாக்கைகள்தான் இப்போது தமிழ் மக்களுக்கு தேவை. மாறாக நம்பிக்கையீனங்களை விதைக்கின்ற குழப்பங்களை விளைவிக்கின்ற கதைசொல்லிகள் இப்போது அவசியமற்றது.
இலங்கை தீவு
தமிழ் மக்களின் வளர்ச்சிக்கான பாதையை அதன் வீதி வரைபடத்தை முன்வைப்பதுதான் இன்றைய காலச் சூழலில் பொருத்தமானது. இதனை அரசியல் தலைவர்களும் கருத்துருவாக்கிகளும் முன்வைக்க வேண்டும். தமிழ் மக்களை நம்பிக்கையின்பால் முன்னோக்கி நகர்த்திச் செல்ல வேண்டும்.
அதுவே தமிழினத்தை இலங்கை தீவினுள்ளே நிலைத்து வாழ வழிசமைக்கும். இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் ""தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா"" என்ற ஜி.ஜி.பொன்னம்பலத்தின் கோசமே அன்று தமிழ் மக்களை திரட்சிபெற வைத்தது. அதுவே ”24 லட்சம் தமிழர்களுக்கு ஒரு தனிநாடு வேண்டும்"" என ஆதியாகராஜா ஒரு நூலை எழுத வைத்தது.
அதுவே 300 ஆண்டுகளாக தமிழ் மக்கள் இழந்த இறைமையை மீட்பதற்கான பொதுமக்கள் அபிப்பிராயத்தை தோற்றம்பெற வைத்த ஆரம்ப புள்ளியாக அமைந்தது.பௌத்த மதத்திற்கும் சிங்கள மொழிக்கும் முன்னுரிமையும் கொடுக்கும் அரசியல் யாப்பை சிங்கள தேசம் வரைந்த போது, தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட போது தமிழ் மக்கள் சாத்திக வழியில் போராடினார்கள்.
சாத்வீக வழியில் எதையும் பெற முடியாது என்பதன் வெளிப்பாடுதான் வட்டுக்கோட்டை தீர்மானத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி பிரகடனப்படுத்த காரணமாக அமைந்தது. பொதுமக்கள் அபிப்பிராயம் பலமாக இருந்தமைதான் வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்ற உந்து சக்தியாக அமைந்தது.
ஆனாலும் தமிழர் விடுதலைக் கூட்டணி பிரகடனப்படுத்திய வட்டுக்கோட்டை தீர்மானம் 1977ஆம் ஆண்டு தேர்தலில் தேர்தல் விஞ்ஞாபனமாக முன்வைக்கப்பட்டு தேர்தலில் 78% மக்கள் வாக்களித்ததன் மூலமே அது தமிழ் மக்கள் அரசியல் விருப்பு ((Political Will) என்பதை பறைசாற்றியது.
அந்த மக்கள் ஆணைதான் அடுத்த கட்ட ஆயுதப் போராட்டத்தை நோக்கி தமிழ் மக்களை உந்தி தள்ளியது. தமிழர்களின் ஆயுதப் போராட்டம்தான் ஈழத் தமிழர்களின் அரசியல் பிரச்சினை என்பது உள்நாட்டு ரீதியில் தீர்க்கப்பட முடியாது என்பதை வெளிக்காட்டியது.
தேசிய அபிலாசை
அவ்வாறு தீர்க்கப்பட முடியாத இலங்கையின் அரசியல் எல்லையைத் தாண்டி ஒரு பிராந்திய அரசின் மத்தியஸ்தமத்துடன் இலங்கைக்கு வெளியே இலங்கை அரசையும், தமிழ் தரப்பையும் ஒரு மேசையில் அமர்த்தி பேசும் நிலைக்கு இட்டுச் சென்றது. தமிழ் மக்களின் போராட்டத்தை உலகத்தில் முன்னால் நியாயப்படுத்தி பூட்டான் தலைநகர் திம்பூவில் 1985ஆம் ஆண்டு பேச்சுவார்த்தை வரை சென்றது.
திம்பு பேச்சு வார்த்தையே சர்வதேச கவனத்தை பெறவைத்தது. அதுவே தமிழ் மக்களின் தேசிய அபிலாசை வெளிப்படுத்தும் திம்புக்கு கோட்பாடு என்ற ஒன்றை சர்வதேசத்தின் முன் தமிழ் மக்களால் முன்வைக்க முடிந்தது. நியாயப்படுத்த வழிகோலியது.
அந்தத் திம்பக் கோட்பாடு என்பதும் தமிழ் மக்களுடைய தேசிய விருப்பாகும். இந்தத் திம்பு கோட்பாட்டினால் என்ன பயன் என சிலர் முணுமுணுக்கக் கூடும் ஆனாலும் இந்தத் திம்பக் கோட்பாடு என்பது தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதை வெளிப்படுத்திய ஒரு கோட்பாடு மட்டுமல்ல சர்வதேசத்தை ஏற்க வைத்த ஒரு கோட்பாடு என்ற அடிப்படையில் அதற்குறி முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்தத் திம்பு பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலத்தில் தமிழின படுகொலைகளை இலங்கை அரசு அதிகரித்ததன் விளைவே அந்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது என்பதையும், இலங்கை அரசை ஒரு இனப்படுகொலை அரசு என்ற கருத்து உலகளாவிய ரீதியில் வெளிப்பட வைக்கப்பட்டது என்பதையும் கொள்ள வேண்டும்.
ஆயுதப் போராட்டம் ஒரு பெரு வளர்ச்சி அடைந்திருந்த காலச் சூழ்நிலையில் பொதுமக்கள் அபிப்பிராயத்தை இந்த உலகம் எதிர்பார்த்தது. தமிழிழ விடுதலைப் போராட்டம் ஒரு தனி இயக்கத்தின் முன்னெடுப்பாக அல்லாமல் அது ஒரு பரந்துபட்ட தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டமாகவும், இயக்கமாகவும் வெளியுலகுக்கு காட்ட வேண்டிய தேவை விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டது.
கூட்டு தொடர் அரசியல்
மக்கள் ஆதரவையும் மக்கள் அரசியல் விருப்பையும் அவர்களின் தேசிய அபிலாசைகளையும் வெளிகாட்டுவதற்காகவே 2004ஆம் ஆண்டு தேர்தலில் விடுதலைப் புலிகள் தமது பிரதிநிதிகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை முன்னிறுத்தி தேர்தலில் பங்கெடுத்தனர்.
தேர்தலில் கிடைத்த பெரு வெற்றியை மக்கள் ஆணையாக பிரகடனப்படுத்தவும் முடிந்தது. ஆனால் அதற்குப் பின்னே போர்க்களத்தில் யுத்தத்தின் தோல்வி என்பது பல்வகைப்பட்ட தொடர் நிகழ் போக்குகளினதும், சர்வதேச ஒழுங்கு மாற்றங்களின் தேவைகளின் கூட்டு தொடர் அரசியல் விளைவுகளின் விளைவு என்றுதான் அரசியலில் கணிப்பீடு செய்ய வேண்டும்.
உரிமைக்காக போராடும் தமிழ் மக்கள் காலத்துக்கு காலம் தம்முடைய பொது விருப்பை வழி காட்ட வேண்டும். அதாவது தமிழ் மக்களின் பொது அபிப்பிராயத்தை (Public opinion) வாக்குகளினால் மட்டுமே ஜனநாயக உலகத்தில் வெளிக்காட்ட வேண்டும்.
இவ்வாறு மக்களின் தேசிய விருப்பை அல்லது தேசிய அபிலாசையை தமிழ் மக்களிடம் இருக்கின்ற ஜனநாயக உரிமையாகிய வாக்களிப்பின் ஊடாக வாக்குகளை ஒன்று திரட்டி தமிழ் மக்களின் பொது கருத்து ஒன்றுக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ் மக்களின் ஆணையை அல்லது விருப்பை வெளிக்காட்டுவது இன்றைய தமிழ் மக்களின் அரசியல் சூழலில் மிக மிக அவசியமானது.
தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை அனைத்து மிதவாத அரசியல் தலைவர்களுக்கும் பின்னே நின்று வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவ்வாறே ஆயுதப் போராட்டத்தின் போதும் அந்தப் போராட்டத்தின் பின்னே நின்று தமது தேசிய அபிலாசைகளை போராட்டத்தோடு ஒன்றிணைந்த, செயற்பட்டு, பிள்ளைகளை போர்க்களத்துக்கு அனுப்பி ஆதரவளித்து வெளிப்படுத்தினார்கள்.
தேர்தலில் போராட்டம் யாருக்கு வாக்களிக்க சொன்னதோ அவர்களுக்கு வாக்களித்தும், நிராகரித்தும் வெளிப்படுத்தினார்கள். இங்கே தமிழ் தலைமைகள் மக்கள் ஆணையை சரியாக பயன்படுத்தவில்லை அல்லது சுயநலமாக செயற்பட்டார்கள் அல்லது எதனையும் சாதிக்கவில்லை என்ற கருத்துக்கள் கவனிக்கப்பட வேண்டியவைதான் ஆனாலும் அத்தகைய அரசியல் போக்கு மாற்றத்தை வேண்டியே தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டிய காலச் சூழலில் இருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி தேர்தல்
இன்றைய இலங்கைத்தீவின் ஜனாதிபதி தேர்தலை சிங்கள தேசம் எவ்வாறு தமது அரசியல் பொருளியல் தலைவிதியை தீர்மானிப்பதற்கு விளைகிறதோ அவ்வாறே தமிழ் மக்களும் தமது அரசியல் செல்நெறியை தீர்மானிப்பதற்கு ஒரு தமிழ் பொது வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தி தமிழ் மக்களின் தேசிய அபிலாசை தேர்தல் விஞ்ஞாபனமாக முன்வைத்து தமிழ் மக்களின் வாக்கை தமிழ் தேசிய அபிலாசைக்கான வாக்காக ஒன்று திரட்ட வேண்டும்.
அவ்வாறு திரட்டுவதன் மூலம் தமிழ் தமிழ் மக்களின் மக்கள் ஆணையை மீண்டும் நிலை நாட்ட வேண்டியது இக்காலகட்டத்தின் அவசியத் தேவையாக உள்ளது. சிங்கள தேசத்தில் ஏற்பட்டிருக்கின்ற தலைமைத்துவ போட்டியும், பொருளியல் நெருக்கடியும் தமிழ் மக்களுக்கான ஒரு சாதக சூழ்நிலையை தற்போது தோற்றுவித்துள்ளது.
தமிழ் தேசிய அபிலாசையை வெளிப்படுத்த இந்த ஜனாதிபதி தேர்தல் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்தத் தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் சிங்களத் தலைவர்களை நெருக்கடிக்குள் தள்ள முடியும். எதிரியை நெருக்கடிக்குள் சிக்க வைப்பதுதான் வெற்றிக் கனியை பறிப்பதற்கான தந்துரோபாயமுமாகும்.
எதிரியை நெருக்கடிக்குள் தள்ள வைப்பது தமிழ் மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என ஒரு சாரார் எண்ணக்கூடும் இது மிகவும் அபத்தமானது.வர்த்தகத்தில் ஆபத்துக்களை எதிர்கொள்ளாமல் லாபத்தை சம்பாதிக்க முடியாது. முயற்சிக்காமல் வெற்றி பெறமுடியாது. அமைதியாக சும்மா இருந்தால் சுவாசிப்பதுகூட கடினமாகத்தான் தோன்றும்.
இங்கே போராடாமல் தமிழ் மக்கள் வாழ முடியாது. போராடாமல் விட்டிருந்தால் இன்று இலங்கைத்தீவு சிங்களத்தீவாக மாறியிருக்கும். போராடியதனால்தான் தமிழ் மக்களின் அழிவு ஒரு வரையறைக்குள் தடுக்கப்பட்டு இருக்கிறது, மட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. போராடியதனால் தான் தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினை என்பது ஒரு சர்வதேச பிரச்சினையாக இனம் காணப்பட்டு இருக்கிறது, முன் நிறுத்தப்பட்டு இருக்கிறது.
ஈழத் தமிழர்களுக்கு அமைதியில்லையேல், அரசியல் தீர்வில்லையேல், உரிமை இல்லையேல் இந்து மகா சமுத்திர பிராந்தியத்தில் அமைதி கிட்டப்போவதில்லை என்ற எதார்த்தம் உலகிற்கு உணர்த்தப்பட்டிருக்கிறது. தமிழ் மக்கள் போராடாமல் விட்டிருந்தால் இவை எதுவும் நடந்திருக்காது.
உலகிக்கத் தெரியாமலே அழிந்து போய் இருப்பர். இன்று உருத்தெரியாமல் போயிருக்கும் நியண்டதால் மனித இனம் போன்று ஆஸ்திரேலியா ஒபஜின்கள் போன்று, அமெரிக்கா மாயா, இன்கா மக்கள் போன்று ஈழத்தமிழ் மக்களும் வரலாற்று ஏடுகளிலும், நூதன சாலைகளிலுமே பார்க்க வேண்டிய துப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கும்.
ஈழத் தமிழர்கள் போராடினால் மட்டுமே வாழ்வு இல்லையேல் அழிவே மிஞ்சும் இதுவே வரலாறு எமக்குத் தரும் பாடமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 18 April, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.