சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்: முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை
நிதி உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் வொஷிங்டனில் இருந்து நேற்று பிற்பகல் இலங்கை ஊடகவியலாளர்களுடனான Zoom கலந்துரையாடலின் போதே நிதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்து அவர் இதன் போது விவரித்துள்ளார்.
இதுவரையில் பெறப்பட்ட கடனை மீளச் செலுத்துதல் தொடர்பாகவும் எதிர்காலத்தில் இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கடன் வழங்குநர்களுடன் கலந்தாலோசித்து கடன் மறுசீரமைப்புக்கான நிதி மற்றும் சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே நேரத்தில், தற்போதைய பொருளாதார நெருக்கடியின் குறுகிய கால நடவடிக்கையாக, அடுத்த இரண்டு முதல் நான்கு மாதங்களில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு உலக வங்கி சுகாதாரம், எரிவாயு, உரம் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) உடனடியாக 21.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்து நிதி அமைச்சரின் அறிக்கை மே மாதம் 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
