இலங்கையின் பிரபல கோடீஸ்வரர் கொலையின் பின்னணியில் மனைவி - வெளியான அதிர்ச்சித் தகவல்
இந்தோனேசியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை கோடீஸ்வரர் ஒனேஷ் சுபசிங்கவின் மரணம் கொலை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மனைவி ரோசா சில்வா மற்றும் வீட்டுப் பணிப்பெண் ஆகியோரை கைது செய்ய ஜகார்த்தா பொலிஸார் இன்டர்போல் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளனர்.
பிரேசில் நாட்டு பெண்களான சந்தேக நபர்கள், கடந்த ஜனவரி 20ஆம் திகதி ஜகார்த்தா வந்த நிலையில் ஜனவரி 31ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறினர்.
எனினும் ஒனேஷ்சின் மனைவி, மகள் மற்றும் வீட்டுப் பணிப்பெண் பிரேசில் வரவில்லை என அந்நாட்டு பொலிஸார் , ஜகார்த்தா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் அவர்களை கைது செய்வதற்கு இன்டர்போல் பொலிஸாரின் உதவி நாடப்பட்டுள்ளது.
ஒனேஷ் சுபசிங்கவின் சொத்துக்கள் ஒரு பில்லியன் டொலர்கள் எனவும், அவருக்கு 32 நிறுவனங்கள் சொந்தமாக இருப்பதாகவும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
ஒனேஷ் மர்மமான முறையில் இறந்த அடுக்குமாடி குடியிருப்பின் அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. சில காலங்களுக்கு முன்னர் மரதகஹமுலவில் உரத் தொழிற்சாலையை ஒனேஷ் ஆரம்பித்திருந்ததுடன் அதில் முதலீடு செய்யப்பட்ட தொகை 550 மில்லியன் ரூபாவாகும்.
கடந்த 5ஆம் திகதி 45 வயதான ஒனேஷ் சுபசிங்க மர்மமான முறையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.