இலங்கை பெரும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்! - கலாநிதி தயான் ஜயதிலக எச்சரிக்கை
தமிழ் மக்களின் பிரதிநிதிகளை புறக்கணித்துவிட்டு புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுப்பது வேடிக்கையானது என இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் முன்னாள் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக (Dayan Jayatilleka) தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நிலைமைகளை நேரில் ஆய்வு செய்து இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்க முடியுமா என்பது குறித்து ஆராயும் நோக்கில் ஐவர் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய குழுவினரின் இலங்கை வந்துள்ளனர்.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றிய குழுவினரின் செயற்பாடுகள், மற்றும் அதனுடன் சார்ந்த சர்வதேச விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
"ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக்குழு தற்போது இலங்கையில் கண்காணிப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையில் மனித உரிமைகள் சரியாக மதிக்கப்படுகின்றதா, ஜனநாயகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றதா, ஆட்சி முறைமையில் சிறுபான்மை மக்கள் சரியாக நடத்தப்படுகின்றனரா என்பது உள்ளிட்ட மேலும் பல காரணிகளை உள்ளடக்கி ஆய்வுகளை மேற்கொள்ளவே ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற குழுவினர் இலங்கைக்கு வந்துள்ளனர்.
தற்போது வரையில் பல்வேறு தரப்பினரை அவர்கள் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், அவர்களின் நகர்வுகள் நியாயமானது,
ஏனெனில் ஐரோப்பிய ஒன்றியம் பொதுவாக மனித உரிமைகள் குறித்த விடயங்களில் முக்கியத்துவம் கொடுக்கும் நபர்கள் என்ற வகையில் தமது நாட்டிற்கான சலுகைகளை வழங்கும் நேரங்களில் அவர்கள் எதிர்பார்க்கும் தன்மைகள் அந்தந்த நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகின்றதா என்பதையை கண்காணிப்பது வழக்கமானது.
இலங்கையை பொறுத்த வரையில் கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள நாடு என்ற ரீதியிலும் பல குற்றச்சாட்டுக்களை சுமந்துகொண்டுள்ள நாடு என்ற ரீதியிலும் இலங்கை குறித்து தொலைவில் இருந்து கண்காணிக்காது அவர்களின் குழுவொன்றை அனுப்பி அவர்கள் மூலமாக கண்காணிப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதே இவர்களின் நகர்வாகும்.
அதற்கமைய தற்போது இலங்கை வந்துள்ள கண்காணிப்பு குழுவானது இலங்கையில் பல்வேறு அரசியல் தரப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளனர். சிவில் அமைப்புகளை சந்தித்துள்ளனர், மேலும் பல சந்திப்புகள் நடைபெறவுள்ளன.
இதில் இலங்கை தரப்பு முன்வைக்கும் காரணிகளை சேகரித்து ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் அறிக்கையிடுவதற்கான நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுப்பார்கள். ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்குவது குறித்து இதற்கு முன்னரும் கேள்விகள் எழுந்துள்ளன.
குறிப்பாக யுத்த காலகட்டத்தில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்களை அடுத்து இவ்வாறான தடைகள் பிறப்பிக்கப்பட்டன, யுத்த காலத்தில் எம்மால் சகலதையும் செய்ய முடியாது, ஆனால் யுத்தத்திற்கு பின்னர் கண்டிப்பாக சில விடயங்களை முன்னெடுக்க வேண்டும்.
இலங்கையில் யுத்தத்திற்கு பின்னர் பல்வேறு மாற்றங்களை செய்திருக்க வேண்டும். குறிப்பாக பயங்கரவாத தடை சட்டம் போன்றவற்றை நீக்கியிருக்க அல்லது தளர்வுகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
ஆரம்பத்தில் இருந்து நாமும் இதனை வலியுறுத்தி வந்துள்ளோம். எழுத்து மூலமும், பேச்சுவார்த்தைகளின் போதும் இவற்றை நாம் எடுத்துக்கூறினோம். பயங்கரவாத தடை சட்டத்தை நீக்காது வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன என்பது எமக்கும் விளங்கவில்லை.
நாட்டின் பொருளாதார நிலைமைகள் மிக மோசமாக உள்ள நிலையிலும், வெளிநாட்டு கையிருப்பு இல்லாத நிலையிலும் நாம் உண்மையாக சர்வதேசத்தை நாடி நாட்டை மீட்டெடுக்க வேண்டும்.
மனித உரிமைகளை பாதுகாக்க, பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க, ஜனநாயக செயற்பாடுகளை கையாள, தொழிலாளர் சட்டத்தை பலப்படுத்துவது குறித்து ஏன் அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்ற கேள்வி எம்மத்தியிலும் உள்ளது.
இவ்வாறான காரணங்களை காட்டி ஜி.எஸ்.,பி பிளஸ் வரிச்சலுகை நீக்கப்பட்டால் நாட்டின் பொருளாதாரத்திற்கும் அபிவிருத்திக்கும் பாரிய அடிவிழும், வர்த்தகத்தை மேற்கொள்ளும் வேளையில் கொடுக்கல் வாங்கல் என்ற இரண்டு தன்மைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஒருவழி வியாபார வர்த்தக கொள்கையென எதுவும் இல்லை. திறந்த பொருளாதார கொள்கையில் இருந்து எந்தவொரு நாடும் விலகியதாக தெரியவில்லை. எனவே இலங்கை தரப்பு சிந்திக்கும் விதத்தில் பிரச்சினை உள்ளது.
தேசிய பொருளாதாரம், தேசிய கொள்கை என பேசிக்கொண்டு நாடாக முன்னோக்கி செல்ல முடியாது. பெரிய வியாபார சந்தையில் நாம் இறுக்கமான கொள்கையில் பயணிப்பதால் பாதிப்பு இலங்கைக்கே, இது சர்வதேச வர்த்தக அமைப்பு வரை கொண்டு சென்று இறுதியாக பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படும்.
அதுமட்டுமல்ல இந்த அரசாங்கத்தில் வெளியுறவு இருதரப்பு நகர்வுகள் திருப்திகரமானதாக அமையவில்லை. குறிப்பாக சொல்வதென்றால் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவை எத்தனை அரச தலைவர்கள் சந்தித்தனர்,
முக்கியமான நாடுகளின் தலைவர்கள் எவரும் ஜனாதிபதியை சந்திக்கவில்லை. இது பெருமைப்படக்கூடிய விடயம் அல்ல. அதேபோல் அவரது உரையின் போதும் ஒன்றுக்கு ஒன்று முரணான கருத்துக்களையே முன்வைத்துள்ளார்.
புலம்பெயர் தமிழ் அமைப்புகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என கூறினார், ஆனால் இலங்கையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகளுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லாத ஒருவர் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு அழைப்பு விடுப்பது என்பது கேள்விக்கு உற்படுத்தும் கருத்துக்களாகும்.
தேசிய ரீதியில் அனைத்தையும் கையாள்வதாக கூறிக்கொண்டு தமிழர் தரப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்காது யார் எவர் என்று தெரியாத புலம்பெயர் அமைப்புகளுடன் பேசுவேன் என கூறுவது யதார்த்தத்திற்கு அப்பால் பட்டத காரணியாகும் எனவும் அவர் கூறினார்.