புயல் கடந்தாலும் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து - அதிர்ச்சியை ஏற்படுத்தவுள்ள உயிரிழப்புக்கள்
கடந்த சில நாட்களாக கோரத்தாண்டவமாடி, இலங்கையின் காலநிலை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிகமான பாதிப்புக்களை ஏற்படுத்திய டிட்வா புயல் தற்போது இலங்கையை விட்டு முழுமையாக வெளியேறி தற்போது தமிழ்நாட்டின் காரைக்காலுக்கு மேற்கே நிலைகொண்டுள்ளது.
இன்னும் ஒரு நாள் டிட்வா இலங்கையில் நிலைத்திருந்தால் மாபெரும் பேரழிவுகள் இலங்கையில் நிகழ்ந்திருக்கும். குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் மிகப்பெரும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கும் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இந்த டிட்வா புயலின் நகர்வில் பல தடவைகள் எனக்கு அதிக அச்சம் இருந்தது. ஏனெனில் அதன் நகர்வு அத்தகையது.
மத்திய மலை நாட்டின் செல்வாக்கு
கடந்த 24.11.2025 அன்று தீவிர தாழமுக்கமாக அதன் நகர்வு வேகம் மணிக்கு 9 கி.மீ. ஆக இருந்தது. பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய பின் மணிக்கு 11 கி.மீ. ஆக இருந்தது.

பின்னர் புயலாக மாறியபோது சிறிது நேரம் மணிக்கு 14 ஆக இருந்தது. பின்னர் மத்திய மலை நாட்டின் செல்வாக்கு காரணமாக மணிக்கு 9 கிலோமீற்றர். ஆக குறைந்தது. பின்னர் மணிக்கு 4 ஆகக் குறைந்தது.
உண்மையில் இந்த நேரத்தில் மிகப்பெரும் அச்சநிலை இருந்தது. ஏனெனில் ஒரு புயலின் நகர்வு வேகம் குறைந்தால் அது நிலைத்து நின்று பெரும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அது மத்திய மலை நாட்டின் செல்வாக்கிலிருந்து விடுபட்டு பொலன்னறுவைக்கு வந்த பின் மீண்டும் வேகமெடுத்து மணிக்கு 14 கிலோமீற்றர் நகர்ந்தது.
பின்னர் மீண்டும் திருகோணமலைக்கு வந்த மீளவும் வேகம் குறைவடைந்து மணிக்கு 8 கிலோமீற்றர் ஆகக் குறைந்தது. இந்த நிலையில் மீண்டும் ஒரு அச்சநிலை ஏனெனில் ஏற்கனவே வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு கனமழை கிடைத்துக் கொண்டிருந்தது.
ஆனால் மீளவும் வேகமெடுத்து மணிக்கு 12 கி.மீ என்ற வேகத்தில் கடலுக்குள் சென்றது. இந்த டிட்வா புயலின் இரண்டு விடயங்களுக்கு இலங்கையின் மத்திய மலைநாடு காரணமாயிருந்தது.
1. புயலின் நகர்வு வேகத்தையும் மையச் சுழற்சியின் வேகத்தையும் கட்டுப்படுத்தியது. 2. மிகக் கனமழை பொழியவும் காரணமாக இருந்தது.
எவ்வாறாயினும் இந்த டிட்வா புயல் இன்னும் ஒரு நாள் இலங்கையில் நிலைத்திருந்தாலும் இலங்கையின் நிலைமை மிக மிக கவலைக்கிடமாக இருந்திருக்கும்.
இலங்கையில் அதிக உயிரிழப்பு
இலங்கையின் நவீன வரலாற்றில் நிகழ்ந்த ஆகப்பெரிய காலநிலை சார் இயற்கை அனர்த்தம் இதுவே. இது இலங்கையில் அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்திய இரண்டாவது இயற்கை அனர்த்தமாக மாறியுள்ளது.

முதலாவது 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி. ஆனால் பொருளாதாரப் பாதிப்பினை ஏற்படுத்திய இயற்கை அனர்த்தங்களில் இதுவே முதலாவது.
ஏனெனில் சுனாமியினுடைய பொருளாதாரப் பாதிப்புக்கள் கரையோரம் சார்ந்து மட்டுமே இருந்தது. ஆனால் டிட்வா புயல் நாடு முழுவதும் பாதித்துள்ளது. இனனும் சில நாட்களில் தாக்க மதிப்பீட்டு அறிக்கை வரும்போது அதனை உணரலாம். உயிரிழப்புக்கள் கூட நாம் நினைப்பதை விட மிக அதிகமாக இருக்கவே வாயப்புண்டு.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதனால் 13 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. ஆனால் பில்லியன் கணக்கான பொருளாதார இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இலட்சக்கணக்கான வயல் நிலங்கள், தோட்ங்கள் அழிந்துள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்துள்ளன. இலட்சக்கணக்கான கால்நடைகளின் நிலை என்னவென்று தெரியவில்லை.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 200க்கு மேற்பட்ட குளங்கள் முழுமையாக புனரமைக்க வேண்டும். வீதிகள், பாலங்கள், புகையிரதப்பாதைகள், பொது நிறுவனங்கள் சேதமடைந்துள்ளன.
அனர்த்தத்துக்கு பின்னான நிலைமையிலும் நாம் மிக அவதானமாகவும் பொறுப்போடும் நடந்து கொள்ளவேண்டும். திட்டமிட்ட வினைத்திறனான அனர்த்த மீட்பு செயற்பாடுகள் அவசியம்.
குறுங்கால அனர்த்த மீட்பு செயற்பாடுகளும் நீண்ட கால அனர்த்த மீட்பு செயற்பாடுகளும் ஒன்றுடனொன்று இணைந்த வகையில் அமைய வேண்டும். இந்த மிகப்பெரிய அனர்த்தத்திலிருந்து இலங்கையர்கள் அனைவரும் மீண்டெழ வேண்டும் என பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.
Bigg Boss: ரெட் கார்டு குறித்து ஏன் கேட்கக்கூடாது? சான்ட்ராவின் நடிப்பை அம்பலப்படுத்திய போட்டியாளர்கள் Manithan
3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri