தமிழர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுத்த மகிந்த - பெருமை பேசும் நாமல்
விடுதலைப் புலிகளை தோற்கடித்து வடக்கு கிழக்கு மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெற்றுக்கொடுத்ததாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச அனுரகுமார திஸாநாயக்க வடக்கிற்கு சென்று 13வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என கூறியதை நான் பார்த்தேன்.
ஆனால் வடக்கு, கிழக்கு மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை வழங்கியவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்பதை நான் கூற விரும்புகின்றேன்.
வடக்கு, கிழக்கு மக்கள்
அத்துடன் 13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களித்து அவர்கள் விரும்பும் முதலமைச்சரையும் மாகாண சபைப் பிரதிநிதிகளையும் நியமிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
வடக்கில் வாக்களிக்கும் உரிமையைக் கூட விடுதலை புலிகள் கட்டுப்படுத்தியிருந்தனர்.
அவர்கள் மாகாண சபையை கேட்கவில்லை, தனி நாடு வேண்டும் என கோரியிருந்தனர். 13வது திருத்தம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
வடக்கில் தேர்தலை எதிர்பார்த்து அரசியல் ஆதாயங்களுக்காக தேர்தலை நெருங்கி வைத்துக்கொண்டு ஏனைய கட்சிகள் இவ்வாறு பேசுவது உண்மையில் வருத்தமளிக்கிறது.
வடக்கு வசந்தம்
வடக்கின் எந்தவொரு அபிவிருத்தி பற்றியும் அவர்கள் பேசவில்லை. ஆனால் எமது அரசாங்கத்தின் காலத்தில்தான் வடக்கு வசந்தம், கிழக்கின் புதுநாள் போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
எனவே 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் மாகாண சபை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை.
13ஆம் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முன், அதைப் பற்றி மேலும் ஆய்வு செய்ய வேண்டும்.
தேர்தலுக்காக 13வது திருத்தச் சட்டத்தை அரசியல் சாதனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் எனவும் அது வடக்கு மக்களின் உணர்வுகளுடன் விளையாடும் செயலாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.