வீட்டை உடைத்த தோட்ட அதிகாரி! அதிரடியாக களமிறங்கி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜீவன்(Video)
மாத்தளை – எல்கடுவ, ரத்வத்தை பகுதியில் தோட்ட தொழிலாளர் ஒருவரின் வீட்டை உடைத்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அங்கு விஜயம் செய்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய உதவி முகாமையாளரை சம்பவ இடத்திற்கு அமைச்சர் அழைத்த நிலையில், தோட்ட நிர்வாகத்தினர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, தோட்ட நிர்வாகத்துடன் ஜீவன் தொண்டமான் கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன் பின்னர் தோட்ட உயர் அதிகாரி ஒருவர் வருகைத் தந்த நிலையில், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. உடைக்கப்பட்ட வீட்டிற்கு பதிலாக, புதிய வீடொன்றை கட்டிக்கொடுக்குமாறு தோட்ட நிர்வாகத்திற்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் ஊடாக, குறித்த குடும்பம் தற்போது வாழும் லயன் அறைகளிலுள்ள 10 குடும்பங்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்குமாறு அமைச்சர் ஜீவன் தொண்டமான், நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
வீடுகளை விரைந்து நிர்மாணித்து கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக பாரத் அருள்சாமி இதன்போது கூறியுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
மலையக தமிழருக்கு தேவைப்படுவது அனுதாபம் அல்ல நியாயம் எனவும், உங்களை அடித்தால் திருப்பி அடியுங்கள் எனவும் தமிழ் முற்போக்கு கூட்டனியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகனேசன் தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பில் மலையக மக்களின் 200 வருட வரலாற்று நூல் (மலையக தமிழ் மக்களுடைய 200 வருட வரலாறு) அறிமுக நிகழ்வு இன்று (20.08.2023) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட மனோகணேசன் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், “மலைய தமிழருக்கு தேவைப்படுவது அனுதாபம் அல்ல. எங்களுக்கு தேவைப்படுவது நியாயம்.
நேற்று காலையில் மாத்தளை மாவட்டத்தில் ரத்வத்த கீழ் பிரிவு தோட்டத்தில் ஒரு அராஜகம் நடந்துள்ளது.
தோட்டத்தின் உதவி முகாமையாளரினால் குடும்பமொன்றின் வீடு அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு வீரம் விளைந்த மண்ணில் இருந்து மலைய மக்களுக்க நான் ஒன்றை சொல்கின்றேன். உங்களை அடித்தால் திருப்பி அடியுங்கள். உங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக தற்பாதுகாப்புக்காக நீங்கள் திருப்பி அடிப்பதற்கு உரிமை உண்டு.
இனிமோல் நாங்கள் பொறுக்கமாட்டோம் என்று கூறிவைக்க விரும்புகின்றோம்.” என தெரிவித்துள்ளார்.
செய்தி - கீதன்
மூன்றாம் இணைப்பு
மாத்தளை- எல்கடுவ பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றின் வீட்டை முகாமையாளர் ஒருவர் அடித்து உடைக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
எல்கடுவ பிளான்டேசனுக்கு உட்பட்ட , ரத்வத்த கீழ் பிரிவில் மூன்று குடும்பங்கள் உள்ளடங்களாக 14 பேர் ஒரே லயன் அறையில் தொடர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தமக்கு வீடொன்றையோ, வீடமைக்க காணித்துண்டொன்றையோ வழங்குமாறு பல வருடங்களாக பல தோட்ட முகாமையாளர்களிடம் குறித்த குடும்பத்தினர் கேட்டுவந்துள்ளனர்.
இதற்கமைய தற்போதுள்ள முகாமையாளருக்கு முன்பிருந்தவர், ஒரு இடத்தைக்காட்டி இங்கு வீடமைத்துக்கொள்ளுங்கள் என அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாமையாளரின் அடாவடித்தனம்
குறித்த முகாமையாளரின் அனுமதிக்கமைய அந்த குடும்பத்தினர் வாழைமரம் உள்ளிட்ட சில பயிர்களையும் அவ்விடத்தில் நாட்டியதுடன்,ஒரு கிழமைக்கு முன்பு அவ்விடத்தில் தற்காலிக குடியிருப்பொன்றை அமைத்துள்ளனர்.
இதன்போது சம்பவ இடத்திற்கு நேற்று(19.08.2023) தனது அதிகாரிகள் சகிதம் சென்ற உதவி முகாமையாளர், அந்த குடியிருப்பை உடைத்து பொருட்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
உதவி முகாமையாளர் உட்பட இரு அதிகாரிகள் இணைந்து வீட்டை உடைத்து பொருட்களை சேதம் செய்யும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது.
மேலும் அந்த உதவி முகாமையாளரின் அடாவடித்தனம் குறித்து உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.