இலங்கையில் ஆபத்தானவர்கள் வெளிநாடுக்கு தப்பிச் செல்ல உதவும் அரச அதிகாரிகள்
பாதாள உலகக் குழு குற்றவாளிகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு போலி கடவுச்சீட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அரச ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் பிரதேச செயலகத்தின் உதவி முகாமையாளர் மற்றும் வவுனியா பிரதேச செயலக பிரதம பெண் எழுத்தர் ஆகியோர் நேற்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 20ஆம் திகதி பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவர் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நடத்திய விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி கடவுசீட்டுகள்
பாதாள உலக குழுவின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கு தொடர்புடையவர்களை இரகசியமாக வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக கடவுச்சீட்டு தயாரித்ததாக சந்தேகிக்கப்படும் ஆண் மற்றும் பெண்ணிடம் 9 போலி கடவுசீட்டுகள் மற்றும் 3 அடையாள அட்டைகளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த போலி கடவுச்சீட்டுகள் தயாரிப்பின் பின்னணியில் தற்போது வெளிநாட்டில் இருக்கும் கணேமுல்ல சஞ்சீவ என்ற குற்றவாளி இருப்பதாகவும், அதற்காகவே பணத்தை செலவிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மே 20ஆம் திகதி ரணகல மாவத்தையில் பொரளை லெஸ்லி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர் மற்றும் பாதாள உலக துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கொத்த அசங்க உள்ளிட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை இதன் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |