இறுதிப் போர் சாட்சியங்களில் ஒன்றான நந்திக்கடல் இனி சுற்றுலாத்தளம்! அரசு நடவடிக்கை
இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற நந்திக்கடல் களப்பு பகுதியை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கையில் கடற்பகுதிகளில் உள்ள கவர்ச்சியான இடங்களை கண்டறிந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவரக்கூடிய வகையில் அவற்றை சுற்றுலா பிரதேசங்களாக மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி 24 கடற் பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றுள் நந்திக்கடல் கடற்பகுதியும் உள்ளடங்கியுள்ளது.
நந்திக்கடல் களப்பு
இப்பகுதிகளை சுற்றுலா பிரதேசமாக மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்கள், தனியார் முதலீடுகளை உள்ளடக்கிய வகையிலேயே இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
புத்தளம் களப்பு, குடவ, வாடிய, வைக்கால, நீர்கொழும்பு களப்பு, ப்ரீத்திபுர, கொக்கல களப்பு, கிரிந்த, எலிபன்ரொக், உப்புவெளி, சாம்பல்தீவு பீச், மற்றும் நாயாறு பீச் மற்றும் நந்திக்கடல் களப்பும் இதில் உள்ளடங்குவதாக அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற, பல்லாயிரம் மக்கள் உயிர் நீத்த, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடலை மீட்டதாக அரசு அறிவித்த பகுதியாக நந்திக்கடல் பகுதி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |