இலங்கை தொடர்பான நிகழ்ச்சி நிரலுடன் இன்று ஆரம்பமாகும் ஐ.நா அமர்வு
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, ஜெனீவாவில் அதன் வழக்கமான செப்டெம்பர் அமர்வை இன்று இலங்கை தொடர்பான நிகழ்ச்சி நிரலுடன் ஆரம்பிக்கிறது.
மனித உரிமைகள் பேரவையின் தலைவரான, பிஜியின் நஜாத் ஷமீம் கான், இன்று 48ஆவது பேரவை அமர்வை ஆரம்பித்து வைக்கிறார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் மிச்ஷெய்ல் பெச்செலெட் தனது வருடாந்த அறிக்கையின் புதுப்பிப்பை இன்று வெளியிடுகிறார்.
அதே நேரத்தில் அவரது புதுப்பிப்பு அறிக்கை பற்றிய பொது விவாதம் நாளை ஆரம்பித்து, நாளை மறுநாள் முடிவடையும்.
இந்த அமர்வின் போது உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீண்டும் நிகழாத உத்தரவாதங்களை ஊக்குவித்தல் குறித்த சிறப்பு அறிக்கையாளர் இலங்கை குறித்த அறிக்கையை முறையாக முன்வைக்கவுள்ளார்.
இதன்போது மனித உரிமைகள் பிரச்சினையில் போதிய முன்னேற்றத்தை, இலங்கை உறுதி செய்யத் தவறியது குறித்த அதிருப்தி வெளியிடப்படும் என்று ஜெனீவா தரப்புகள் தெரிவித்துள்ளன.
அத்துடன் பல நாடுகள் பொது விவாதத்தின் போது இலங்கை மீதான அதிருப்தி நிலைப்பாட்டை வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமர்வின்போது நீதி, இழப்பீடு மற்றும் மீளாத உத்தரவாதங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான சிறப்பு அறிக்கையாளர், முன்வைக்கவுள்ள இலங்கை குறித்த அறிக்கைக்கு, இலங்கை ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளது.
இப்போது அந்த பதில் இலங்கை அரசாங்கத்தின் கருத்தாக சேர்க்கப்பட்டுள்ளது.
அதில், உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீண்டும் நிகழாத உத்தரவாதங்களை மேம்படுத்துவது தொடர்பில், "துன்புறுத்தல், அச்சுறுத்தல்கள், கண்காணிப்பு" என்று கூறப்படும் விடயங்களை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அத்துடன் உள்நாட்டு பொறிமுறையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.