தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப் பரவலாக்கம் கோரி தொடரும் மக்கள் போராட்டம் (Photos)
புதிய இணைப்பு
'கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்' எனும் தொனிப் பொருளில் மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை பகுதியில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் நூறு (100) நாட்கள் நடைபெற உள்ள செயல் திட்டத்தின் 17வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இக் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களால் 100 நாள் செயற்திட்டத்திற்கான பொது மகஜர் வாசிக்கப்பட்டது.
மக்களின் கருத்துக்கள்
அதே நேரம் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை பெறுவதற்கான தெளிவுபடுத்தல்கள் மற்றும் அரசியல் தீர்வு விடயத்தில் மக்களின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக கருத்துக்களும் உள் வாங்கப்பட்டது.
குறித்த போராட்டம் வடக்கு-கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் 100 நாட்கள் வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப் போராட்டத்தில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ, மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் எஸ். திலீபன் மற்றும் கிராம மட்ட அமைப்புகள், விவசாய, மீனவ சங்கங்கள், பெண்கள் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள் மனித உரிமை ஆர்வலர்கள், மன்னார் மெசிடோ மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் பணியாளர்களும் கலந்து கொண்டார்கள்.
முதலாம் இணைப்பு
வவுனியா - செட்டிகுளம் பகுதியில் இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கான கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வினை வலியுறுத்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவால் இப் போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டோர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
“இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் சிறுபான்மை தமிழ் மக்களான நாம் ஆட்சிக்கு வந்த பெரும்பான்மை அரசாங்களின் இனவாதக் கொள்கைகளால் பல்வேறு வழிகளிலும் அடக்கப்பட்டு வந்துள்ளோம். அது இன்றுவரை தொடர்கிறது.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப் பரவலாக்கம்
இதுவே தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப் பரவலாக்கம் குறித்து சிந்திக்கத் தூண்டியது.
இதன் நியாயத்தன்மையை பிராந்திய நட்பு நாடான இந்தியாவும் சர்வதேச நாடுகளும் என்றோ ஏற்றுக்கொண்டுள்ளன.
அந்தவகையில் வடக்கு கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு அதிகாரப்பரவலாக்கம், என்பது இலங்கையின் அரசியலமைப்பின் அங்கமாக இருப்பதுடன், சர்வதேச சமூகத்தினாலும் ஐக்கிய நாடுகள் சபையினாலும் வரவேற்கப்படுகின்ற ஒன்றாகும்.
ஜனநாயகமான நூறு நாள் போராட்டம்
ஆகவே எமக்கான உரிமையை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசாங்கத்திற்கும் நட்பு நாடான இந்தியாவிற்கும் சர்வதேச நாடுகளுக்கும் வலியுறுத்திக்கொண்டு வடக்கு கிழக்கு வாழ் மக்களான நாம் எமது சாத்வீகமான ஜனநாயகமான நூறு நாட்கள் செயல்முனைவை ஆரம்பித்திருக்கின்றோம் என்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “நாம் நாட்டை துண்டாடவில்லை கௌரவமான தீர்வையே கேட்கிறோம்”, “கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்”,“பயங்கரவாத தடை சட்டத்தை உடன் நீக்கு” போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மே 9 கலவரம்! இராணுவத்திற்கு உத்தரவிட விரும்பாத கோட்டாபய |