உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகும் நாடுகள்: இலங்கையின் நிலைப்பாடு
உலக சுகாதார அமைப்பிலிருந்து எந்த நாடும் விலகுவதை இலங்கை ஆதரிக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
புதிய அமெரிக்க நிர்வாகம் உலக சுகாதார அமைப்பில், இருந்து விலக முடிவு செய்தமையானது, ஒரு இறையாண்மை கொண்ட நாடாக அமெரிக்கா எடுத்த முடிவு என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கூறியுள்ளார்.
இருப்பினும், அதிக நாடுகள் உலக சுகாதார அமைப்பில் சேர வேண்டும் என்பதை தவிர வெளியேறக்கூடாது என்பதே இலங்கையின் நிலைப்பாடு என்று அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் விலகல்..
முன்னதாக உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ளும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த வாரம் கையெழுத்திட்டார்.
பதவியேற்ற முதல் நாளிலேயே அவர் கையெழுத்திட்ட பெருமளவான நிர்வாக ஆவணங்களில் இதுவும் ஒன்றாகும். அதேவேளை உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்காவை வெளியேற்ற ட்ரம்ப் உத்தரவிட்டது இது இரண்டாவது முறையாகும்.
கோவிட் தொற்றுநோயை உலக சுகாதார அமைப்பு கையாண்ட விதம் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்தே ட்ரம்ப் இந்த முடிவை தமது முன்னைய பதவிக்காலத்தின் போது மேற்கொண்டார். எனினும் பின்னர் ஜனாதிபதியான ஜோ பைடன் அந்த முடிவை மாற்றினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |