அமெரிக்காவுடன் இலங்கையின் பாதுகாப்பு ஒப்பந்தம் வெளியானது
அமெரிக்காவுடன் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு அண்மையில் மேற்கொண்ட மொன்டானா ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு, மொன்டானா தேசிய பாதுகாப்புப் படை மற்றும் அமெரிக்க கடலோரக் காவல் படையின் 13வது மாவட்டம் ஆகியவற்றுக்கிடையே பயனுள்ள ஒத்துழைப்பு உறவுகளைக் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டு 'மொன்டானா' புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 14 ஆம் திகதி கையெழுத்திடப்பட்டது.
பாதுகாப்பு ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தத்தில் இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யாகொந்த, மொன்டானா தேசிய பாதுகாப்புப் படையின் பிரிகேடியர் ஜெனரல் ட்ரென்டன் கிப்சன் மற்றும் இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே. சங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தம் ஆரம்பத்தில் ஐந்து வருட காலத்திற்கு நடைமுறையில் இருக்கும், அதன் பிறகு தானாகவே நீடிக்கப்படும்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், விமான நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பு, கடல்சார் கள விழிப்புணர்வு, சைபர் பாதுகாப்பு, மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்தப் பதிலளிப்பு, தலைமைத்துவ மேம்பாடு, இராணுவ மருத்துவம் மற்றும் பொறியியல், சமாதானப் பேணல், அணுசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைக்கவும், கலாசாரப் பன்முகத்தன்மையைப் பகிர்ந்து கொள்ளவும் பங்குதாரர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இருப்பினும், இந்த ஒப்பந்தம் சட்டப்பூர்வமாக பிணைக்கும் தன்மை கொண்டது அல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.