நீண்ட இடைவெளிக்கு பின்னர் இலங்கை அணியின் சாதனை
நீண்ட இடைவெளிக்கு பின்னர் இலங்கை கிரிக்கெட் அணி, பங்களாதேஷ் அணிக்கு எதிராக சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது.
சுமார் எட்டு ஆண்டுகளின் பின்னர் இலங்கை அணி, பங்களாதேஷ் அணியை சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் வெற்றியீட்டியுள்ளது.
கண்டி பல்லேகலே மைதானத்தில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்களினால் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட் இழப்பிற்கு 285 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதில் குசால் மெண்டிஸ் 124 ஓட்டங்களையும், அணித் தலைவர் சரித் அசலங்க 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் அணியின் சார்பில் தக்சீன் அஹமட், மெஹதி ஹசன் மிராஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 39.4 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 186 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.
இதில் தெளஹித் ஹிட்ரோய் 51 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டார்.
பந்து வீச்சில் அசித் பெர்னாண்டோ மற்றும் துஸ்மந்த சமீரா ஆகியோர் தலா மூன்று விக்கட்டுகளை வீழ்த்தினர்.
இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற அடிப்படையில் இலங்கை அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.