இலங்கையின் பொருளாதார நெருக்கடி : வெளியான அறிக்கை
இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது அதன் தீவிரத்தன்மை மற்றும் பரந்த சமூகத்தின் மீது அது ஏற்படுத்திய பாதகமான விளைவுகளைக் கருத்தில் கொண்டு,பொருளாதாரம் எவ்வாறு நிர்வகிக்கப்படக்கூடாது என்பதற்கான பாடநூல் நிகழ்வாக சுட்டிக்காட்டப்படுவதாக திறைசேரி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் திறைசேரி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் வரும் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் அண்மைய வருடாந்த அறிக்கையில் '2022 பொருளாதார நெருக்கடி - கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழி' என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி
கடந்த ஆண்டு, குறிப்பாக 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து சாதகமற்ற போக்குகளைக் கருத்தில் கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவது உட்பட சரியான பொருளாதாரக் கொள்கை நடவடிக்கைகள் முன்கூட்டியே எடுக்கப்பட்டிருந்தால் நிலைமையை சிறப்பாக நிர்வகிக்க முடிந்திருக்கும்.
அத்துடன் நெருக்கடியின் மோசமான விளைவுகளைத் தணித்திருக்கலாம். எனினும் கடைசி முயற்சியாக சில வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதற்கான முயற்சிகள் மிகவும் தாமதமானது மற்றும் தோல்வியடைந்தது.
உத்தியோகபூர்வமாகவும் பகிரங்கமாகவும் சாத்தியமான பொருளாதார நெருக்கடி பற்றிய பல முன்னறிவிப்புகள் மற்றும் விவாதங்கள் இருந்தபோதிலும், அவை மிகவும் தாமதமாகும் வரை புறக்கணிக்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திறைசேரியின் அறிக்கை
இந்த நெருக்கடியானது, ஜனரஞ்சக மற்றும் நீடித்து நிலைக்க முடியாத கொள்கைகளை நம்புவதற்கு இடமில்லை என்பதையே காட்டுகிறது.
மேலும், அரசியல் மற்றும் சித்தாந்த ரீதியாக உந்துதல் பெற்ற முடிவுகளின் மீது அதிக நம்பிக்கை வைப்பதால் ஏற்படும் ஆபத்துகளை இது தெளிவாகக் காட்டுகிறது.
எனவே தற்போதைய சூழலில் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட நிதியளவை கருத்தில் கொண்டு இலங்கை தனது செலவினங்களை திறமையாக நிர்வகிப்பது மிகவும் முக்கியமானது என்று அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
சுகாதாரம், கல்வி மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கான செலவினங்களை முன்னுரிமைப்படுத்துவதை அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
நிதித்துறையில் உள்ள தீவிரமான சிக்கல்களைக் கருத்தில் கொண்டு ஆடம்பரத்திற்கு இடமில்லை, எனவே பொது நிதிகளை மிகுந்த கவனத்துடனும் வலுவான ஒழுக்கத்துடனும் நிர்வகிப்பது முன்னெப்போதையும் விட முக்கியமானது என்று திறைசேரியின் அறிக்கை கூறியுள்ளது.
பொருளாதார ஸ்திரத்தன்மை
சர்வதேச நாணய நிதியத் திட்டம் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீண்டும் நிலைநிறுத்த உதவும், ஆனால் 'நாடு எதிர்கொள்ளும் அனைத்து நோய்களுக்கும் இது ஒரு சஞ்சீவியாக இருக்காது என்று அறிக்கை மீண்டும் வலியுறுத்தியது.
சரியான, உறுதியான மற்றும் நடைமுறைப்படுத்தக்கூடிய மாற்றீடு இல்லாமல், அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட சொல்லாட்சியின் அடிப்படையில் செயற்பட்டால், ஏற்கனவே பலவீனமான இலங்கையின் பொருளாதாரத்திற்கு மேலும் துயரங்களையே அது உருவாக்கும் என்றும் திறைசேரியின் அறிக்கை தெளிவுப்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |