அறுபது வயதில் ஓய்வுபெறுவதை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு
அறுபது வயதில் ஓய்வுபெறுவதை எதிர்த்து மருத்துவ நிபுணர்கள் குழுவொன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு 60 வயது பூர்த்தியானவுடன் ஓய்வு பெறுவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக 176 மருத்துவ நிபுணர்கள் அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.
வைத்தியர்களுக்கு கட்டாய ஓய்வு
கடந்த ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி கூடிய அமைச்சர்கள் சபையினால் 60 வயதிற்குட்பட்ட விசேட வைத்தியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக மனுதாரர் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது ஒரு தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற முடிவு என்று சுட்டிக்காட்டிய அவர்கள், மருத்துவ நிபுணர்கள் குறைந்தபட்சம் 63 வயது வரை சேவை செய்வதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் 13 விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்திய உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறும் திகதி குறிப்பிடப்பட்டு கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் எம்.டி.ஏ. ரொட்ரிகோ குறித்த ஓய்வூபெறுதல் குறித்த முன்னறிவிப்புக் கடிதத்தை வழங்கியுள்ளார்..
அதன்படி, ஜூலை முதலாம் திகதியில் இருந்து, மூன்று சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மூன்று வைத்தியர்கள் ஓய்வு பெற வேண்டும். மற்ற நான்கு சிறப்பு மருத்துவர்கள் மற்றும் 3 வைத்தியர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் ஓய்வு பெற உள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




