20 இலட்சம் வாக்குகளால் வெற்றி! புலனாய்வுத் துறையின் தகவல் என கூறும் சஜித்
21ஆம் திகதி எந்த சந்தேகமும் இன்றி 20 இலட்சம் வாக்குகளால் நாம் வெற்றி பெறுவோம். ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க கூட்டணி 21ஆம் திகதியோடு தோல்வியை தழுவுவார்கள். இது புலனாய்வுத் துறையின் தகவல்களாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் எம்பிலிப்பிட்டிய நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
புத்த பெருமானின் ஆசீர்வாதம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை சங்கைக்குரிய தலதா மாளிகையில் வைத்து, தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்தோம். புனித தலதா மாளிகையின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்ட முதல் ஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்படுவேன்.
எங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தை புத்த பெருமானின் ஆசீர்வாதங்கள் பாதுகாக்கும். அத்தோடு இந்த வெற்றியை அமைதியான முறையில் கொண்டாட வேண்டும். மாற்றுக்கருத்து கொண்டுள்ள எவரையும் எதிரியாக பார்க்காமல் அவர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த நாட்டு பிரஜைகளுக்கு தமக்கு விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்கான உரிமையை வழங்குவோம். தமது மதத்துக்கான, கலாசாரத்துக்கான உரிமையுள்ள நாடு.
அதனை நாம் மேம்படுத்துவதோடு நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம். போதைப் பொருளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் நாட்டை மீட்டெடுப்போம்.
ஜேவிபி, மொட்டு, திசைகாட்டி, unp போன்ற கட்சிகளில் உள்ளவர்கள் தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம்.
உங்களுடைய வாக்குகளை வீணடிக்காது ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவை வழங்குமாறு வேண்டுகோள் விடுகின்றோம். முழு நாட்டையும் ஐக்கியப்படுத்தி ஒற்றுமையுடனும், நட்புடனும், நல்லிணக்கத்துடனும் நாட்டை வலுப்படுத்துவதோடு, இந்த நாட்டை கட்டி எழுப்புவோம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |