ரணிலால் மட்டுமே முடியும் : அமைச்சர் பந்துல
வன்முறை அரசியலை நாட்டிலிருந்து இல்லாதொழிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மட்டுமே முடியும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று (15) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ரணிலுக்கு ஆணையை வழங்க வேண்டும்..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களாக, வன்முறைகள், துன்பம் மற்றும் மரண ஓலங்களை நாங்கள் அனுபவித்திருக்கிறோம். அண்மைக்கால வரலாற்றில் வடக்கு, தெற்கு வன்முறை அரசியலால் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் ஏராளமாக அழிக்கப்பட்டுள்ளன.
1989 பயங்கரவாதத்தின்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், பயங்கரவாத சகாப்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், ஜே.வி.பி படிப்படியாக ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்தது. அவர்கள் ஒருபோதும் வன்முறையில் ஈடுபடவில்லை.
கடந்த தேர்தல்களில் அமைதியாக கலந்து கொண்டனர். ஆனால் இது நாடகம் என்பது 2022 ஆம் ஆண்டு மே 9 ஆம் திகதியன்று நடந்த ஜனநாயக விரோதப் போராட்டத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டது. அத்துடன், தற்போது இவர்கள் இலங்கையை பங்களாதேஷாக மாற்ற முயற்சிக்கின்றனர்.
பங்களாதேஷ் மிகவும் சிறப்பாக ஆளப்பட்ட நாடு. இன்று போராட்டக்காரர்களால் அவர்கள் ஆழமான பள்ளத்தில் வீழ்ந்துள்ளனர். தண்ணீர், எரிவாயு, எண்ணெய், மின்சாரம் இல்லாத நாடாக மாறியுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது 251 நிறுவனங்களை திரும்ப பெற்றுள்ளனர்.
அந்தப் பாதுகாப்பின்மை நிலையை இலங்கை பெறாதிருக்க வேண்டுமானால், செப்டம்பர் 21 திகதியன்று மக்கள் சிந்தித்து செயற்படவேண்டும்.
இரண்டு வருடங்களாக இந்த நாட்டை பாதுகாப்பாக கொண்டு வந்து, நாட்டின் பொருளாதாரத்தையும் உங்களை பலப்படுத்தி வரும் ரணில் விக்ரமசிங்கவுக்கு, உங்கள் மற்றும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை மேலும் பாதுகாப்பதற்கான ஆணையை நீங்கள் வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.