தெங்குப் பயிர்ச்செய்கை அதிகார சபையில் மில்லியன் கணக்கில் ஊழல்: கோப் குழுவில் முறைப்பாடு
தெங்குப் பயிர்ச் செய்கை சபையின் நிர்வாகத்தில் பல மில்லியன் ரூபா ஊழல்கள் நடைபெற்றுள்ளமை கோப் குழு விசாரணையில் வெளிவந்துள்ளது.
தெங்குப் பயிர்ச் செய்கை சபையின் பிரதான கட்டடத்துடன் மேலதிகமாக ஒரு பகுதியை நிர்மாணிக்கும்போது, இரண்டு மில்லியன் பத்து இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில்(COPE) தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், முன் அனுமதியின்றி இந்த நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நீர்கொழும்பு தெங்கு விதை அலகுக்கான கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக, ஆலோசனை நிறுவனம் ஒன்றிற்கு கிட்டத்தட்ட இருபது இலட்சம் ரூபா பணம் செலுத்தியமை தொடர்பில் முறையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோப் குழு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
நிர்வாகச் சிக்கல்கள்
தென்னை அபிவிருத்தி அதிகார சபை, தெங்குப் பயிர்ச் செய்கை சபை மற்றும் தென்னை ஆராய்ச்சி சபை ஆகியவற்றின் தலைவர்கள் கடந்த 21ஆம் திகதி COPE குழுவின் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது இந்த தகவல்கள் தெரியவந்துள்ளது.
மேலும் தென்னை அபிவிருத்தி அதிகார சபை, தெங்குப் பயிர்ச்செய்கை சபை, தென்னை ஆராய்ச்சி சபை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள பல நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் குளறுபடிகள் தொடர்பான தகவல்கள் அங்கு தெரியவந்துள்ளன.
இதேவேளை, தேங்காய் ஏலத்தின் ஏகபோக மாஃபியாவை தடுத்து நிறுத்துவதற்கும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் ஒன்லைன் முறை அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் அது செயலற்ற நிலையில் இருந்தமை தொடர்பில் கோப் குழு கடும் அதிருப்தியை வெளியிட்டது.
மேலும், தென்னை பயிர்ச் செய்கை அதிகாரசபைக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள பயிர்களுக்கு இறுதியாக கடந்த 2016ம் ஆண்டு உரம் இடப்பட்டது தெரியவந்துள்ளது.
அனுமதியின்றிய முன்பணம்
அரசாங்கத்திற்குச் சொந்தமான தென்னந்தோப்புகளுக்கு உரம் இடப்படாமை தொடர்பில் குழுவின் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் தேங்காய் எண்ணெய் பாவனையில் 78 வீதமானது இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெயின் மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றமை பெரும் முரண்பாடான விடயம் எனவும், டிஜிட்டல் விளம்பரப் பலகையை அமைப்பதற்காக தனியார் நிறுவனத்திற்கு முன் அனுமதியின்றி பத்து இலட்சம் ரூபா முன்பணம் செலுத்துவதும் சிக்கலாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020-2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் நுகர்வுக்காக 187,623 மெற்றிக் தொன் தேங்காய் எண்ணெய் மற்றும் 225,510 மெற்றிக் தொன் “பாம் ஒயில்” இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனவே, இந்த நாட்டில் தேங்காய் எண்ணெய் பாவனையில், 22 வீதம் உள்நாட்டு உற்பத்தியிலும் 78 வீதம் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெயிலும் பெறப்பட்டமை பெரும் முரண்பாடாக உள்ளதாக கோப் குழு கூறுகிறது.
மேலும், இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் தரத்தில் உள்ள சிக்கல்கள் குறித்தும் இதன்போது விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |