காகம் திருடிய வடையை நரி கவர்ந்த கதை...!
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் நாடு கொந்தளித்துக் கொண்டிருந்தது. எந்த ஒரு ஜனாதிபதிக்கு சிங்கள மக்கள் மூண்டில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினார்கள். ஓர் அரசனுக்குரிய அதிகாரங்களை வழங்கினார்களோ அதே கோத்தாபயவை நாட்டை விட்டு துரத்திய நாட்கள் இவை.
இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் முன்னப்பொழுதும் இடம்பெற்றிராத காட்சிகள் காட்சிகள் அவை. இலங்கைத் தீவில் அரை நூற்றாண்டு காலத்துள் ஏற்பட்ட நான்காவது மக்கள் எழுச்சி அது.
முன்னைய மூன்று மக்கள் எழுச்சிகளும் ஆயுதம் ஏந்தியவை. ஆனால் அரகலய என்று அழைக்கப்பட்ட தன்னெழுச்சி போராட்டங்கள் ஆயுதம் ஏந்தியவை அல்ல.
இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் தோன்றிய நான்காவது மக்கள் எழுச்சி அது.எனினும் முடிவில் அது நசுக்கப்பட்டது.அதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
அரசு இல்லாத இனம்
எந்த ஒரு சிஸ்டத்துக்கு எதிராக அப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோ, அதே சிஸ்டம் ஆளை மாற்றி தன்னை காப்பாற்றிக் கொண்டது.தன்னெழுச்சிப் போராட்டங்களின் கனிகளை இரண்டு தரப்புகள் தங்களுடைய சட்டை பைகளுக்குள் போட்டுக் கொண்டன.
ஒன்று மேற்கு நாடுகள். மற்றது,ரணில் விக்ரமசிங்க. நூற்றாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பிரஞ்சுப் புரட்சியைப் போலவே அரகலயவின் கனிகளை ரணில் விக்கிரமசிங்க அபகரித்துக் கொண்டார். மன்னர்களுக்கு எதிராக தொடங்கிய பிரஞ்சுப் புரட்சியின் முடிவில் நெப்போலியன் புரட்சியின் கனிகளை சுவீகரித்துத் தன்னை பேரரசனாக பிரகடனப்படுத்திக் கொண்டார்.
ரணிலும் அப்படித்தான். தமிழ் மக்கள் தங்களுடைய போராட்டத்தை பிராந்தியத்தில் இந்தியாவும் சீனாவும் உட்பட உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் இணைந்து தோற்கடித்ததாக நம்புகிறார்கள்.
இறுதிக்கட்டப் போரில் முழு உலகத்தாலும் தாங்கள் கைவிடப்பட்டதாகவும் நம்புகின்றார்கள். இலங்கைத் தீவில் தமிழர்கள் ஒரு சிறிய இனம். அரசு இல்லாத இனம். ஆனால் அரசுடைய,பெரிய இனமாகிய சிங்கள மக்கள் கடைசியாக நடத்திய போராட்டத்துக்கு என்ன நடந்தது? அரகலய போராட்டத்தின் தொடக்கத்தில் அதன் பின்னணியில் மேற்கத்திய தூதரகங்கள் செயல்பட்டதாக விமல் வீரவன்ச போன்றவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
அரகலயவின் பின்னணியில் மேற்கு நாடுகள் இருந்தனவோ இல்லையோ,அந்தப் போராட்டத்திற்கு மேற்கு நாடுகளின் ஆசிர்வாதம் இருந்தது என்பது உண்மை.சீனாவுக்கு இணக்கமான ராஜபக்ச குடும்பம் அகற்றப்படுவதை மேற்கு நாடுகள் விரும்பி ரசித்தன. ராஜபக்சக்களை தேர்தல்களின் மூலம் அகற்றுவதில் இருக்கக்கூடிய சவால்களை 2015 இல் இருந்து 2018 வரையிலுமான அனுபவம் அவர்களுக்கு உணர்த்தியது.
மேற்கு நாடுகள் தமக்குப் பாதகமான ஆட்சிகளை எப்படி ஆட்சி மாற்றங்களின் மூலம் அல்லது தேர்தல்களின் மூலம் அகற்றலாம் என்றுதான் சிந்திக்கின்றன.உலகம் முழுவதும் அந்த உத்தியைத்தான் கையாண்டு வருகின்றன.
சீனாவின் வியூகம்
இலங்கைத் தீவில் 2015 ஆம் ஆண்டு அந்த உத்தி முதலில் வெற்றி பெற்றது. எனினும்,மூன்று ஆண்டுகளில் அந்த உத்தியின் பங்காளிகளில் ஒருவராகிய மைத்திரிபால சிறிசேன அதைத் தோற்கடித்து விட்டார்.
இவ்வாறு இலங்கைத் தீவில் சீனாவுக்குச் சார்பான ராஜபக்சக்களை அகற்றும் நோக்கத்தோடு 2015இல் மேற்கு நாடுகளும் இந்தியாவும் இணைந்து முன்னெடுத்த ஆட்சி மாற்றம் மூன்று ஆண்டுகளில் தோற்கடிக்கப்பட்டது.
மீண்டும் ராஜபக்சக்கள் அசுர பலத்தோடு மேலெழுந்தார்கள்.ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின்னணியில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை சிங்கள மக்களிடம் கேட்டுப் பெற்றார்கள். அதாவது மேற்கு நாடுகளின் ஆட்சி மாற்ற உத்தி இலங்கை தீவில் முதற்கட்டமாக தோல்வியுற்றது.
ஆனால் அரகலய மீண்டும் மேற்கு நாடுகளுக்கு வெற்றி வாய்ப்புகளைக் கொடுத்தது. கத்தியின்றி, ரத்தமின்றி, தேர்தலின்றி,அதிகம் காசு செலவழிக்காமல், ஒரு அரகலய ராஜபக்சக்களைப் பதவியில் இருந்து அகற்றியது.
அல்லது சீனாவின் வியூகத்தைக் குழப்பியது எனலாமா? மேற்கு நாடுகளுக்கு அதனால் லொத்தர் விழுந்தது.ஒரு ஆட்சி மாற்றத்தின் மூலம் கிடைக்கக்கூடிய குறைந்தபட்ச அனுகூலங்களை அவர்கள் பெறக்கூடியதாக இருந்தது.
அதாவது அரகலயவின் கனிகளை மேற்கு நாடுகள் தமது சட்டை பைகளுக்குள் போட்டுக் கொண்டன என்று பொருள். இதில் தமிழர்களுக்கு ஒரு பாடம் உண்டு. ஏற்கனவே அந்த பாடம் தமிழர்களுக்கு உண்டு.
இந்தியா, சீனா உதவி
ஆனாலும் மீண்டும் ஒரு தடவை கடந்த ஆண்டு அந்தப் பாடம் புதிய வடிவத்தில் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது. அது என்னவெனில், சிறிய இலங்கைத் தீவில் நடக்கும் எந்த ஒரு போராட்டத்தையும் ஒரு கட்டத்தில் பேரரசுகள் தத்தெடுத்துவிடும் என்பதுதான்.
அந்த போராட்டத்தை ஒன்றில் நசுக்கப் பார்க்கும் அல்லது அதன் கனிகளைத் தங்களுடையது ஆக்கிவிடும் என்பதுதான். இது தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் பொருந்தும். முஸ்லிம்களுக்கும் பொருந்தும்.
ஏற்கனவே ஜேவிபியின் இரண்டு கிளர்ச்சிகளையும் பிரதானமாக இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் உதவியோடு இலங்கைத்தீவு வெற்றிகரமாகத் தோற்கடித்தது. அது போலவே தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளைத் தன்பக்கம் அரவணைத்து தோற்கடித்தது.
கடந்த அரை நூற்றாண்டு காலகட்டத்தில் நான்கு போராட்டங்களை இலங்கைத் தீவு தின்று செமித்திருக்கிறது.தன்னை தேரவாத பௌத்தத்தின் பாதுகாவலனாக காட்டிக் கொள்ளும் ஒரு சிறிய நாடு, நான்கு போராட்டங்களை கொடூரமான விதங்களில் நசக்கியிருக்கிறது.
இதில் சிறிய இனம் பெரிய இனம் என்ற வேறுபாடு இல்லை.வீரமான போராட்டம்;தியாகங்கள் நிறைந்த போராட்டம்;அல்லது அறவழிப் போராட்டம்; படைப்புத்திறன் மிக்க போராட்டம்; உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த போராட்டம் என்ற வேறுபாடு இன்றி எல்லாப் போராட்டங்களையும் இலங்கைத்தீவு தின்று செமித்துவிட்டது.
அதாவது தேரவாத பௌத்தத்தின் ஒரே பாதுகாப்பிடம் என்று கூறப்படும் இச்சிறிய தீவானது போராடும் மக்களின் புதைகுழியாகவும் காணப்படுகின்றது.
அதற்குக் காரணம் என்ன? இக்குட்டித் தீவின் புவிசார் அமைவிடம்தான் அதற்கு காரணம்.அதன் கேந்திர முக்கியத்துவம் மிக்க புவிசார் அமைவிடம் காரணமாக எல்லாப் பேரரசுகளும் இச்சிறிய தீவை நோக்கி வருகின்றன.
போராட்டத்தின் இறுதிவெற்றி
அதனால் ஏற்படும் கவர்ச்சி காரணமாக இச்சிறிய தீவின் ஆட்சியாளர்கள் எப்பொழுதும் உயர்ந்த பேரத்தை அனுபவிக்கின்றார்கள்.
அவர்கள் தமது தேவைகளுக்கு ஏற்ப கூட்டுச் சேர்ந்து,அணிகளைச் சேர்த்து போராட்டங்களை நசுக்கி விடுகிறார்கள். இது தமிழர்களுக்கு மட்டும் நடக்கவில்லை.சிங்களவர்களுக்கும் நடக்கும் என்பதனை கடந்த ஆண்டு மீண்டும் ஒரு தடவை நிரூபித்திருக்கிறது.
தமிழர்களோ சிங்களவர்களோ முஸ்லிம்களோ யார் போராடினாலும் அந்தப் போராட்டத்தின் கனிகளை ஏதோ ஒரு பேரரசு தன் வசப்படுத்த முடியும் என்பதைத்தான் கடந்த 50 ஆண்டுக்கு மேலான அனுபவம் இத்தீவின் மக்களுக்கு உணர்த்துகின்றதா? இதில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் எதுவென்றால், யார் போராடுகிறார்கள், எப்படிப் போராடுகிறார்கள் என்பதற்குமபால், அப்போராட்டத்தில் தமது நலன்களை முதலீடு செய்யும் வெளிச் சக்திகளை எப்படிக் கெட்டித்தனமாகக் கையாளப் போகிறோம் என்பதுதான் இங்கு முக்கியமானது.
இல்லையென்றால் போராட்டத்தின் கனிகளை பேரரசுகள் சுவீகரித்து விடும் என்பதே கடந்த அரை நூற்றாண்டு கால அனுபவம் ஜேவிபியின் முதலாவது போராட்டத்தை சிறிமாவோ பண்டாரநாயக்க இந்தியா மற்றும் சீனாவின் உதவியோடு நசுக்கினார்.இரண்டாவது போராட்டத்தை பிரேமதாச இந்திய படைகளை அகற்றியதன்மூலம் தோற்கடித்தார்.
இந்தியாவை உள்ளே கொண்டுவந்து சிறீமாவோ ஜெவிபியைத் தோற்கடித்தார்.பிரேமதாச இந்தியாவை வெளியேவிட்டு ஜேவிபியைத் தோற்கடித்தார்.
தமிழர்களுடைய ஆயுதப் போராட்டத்தின் கனிகளை இந்திய-இலங்கை உடன்படிக்கை மூலம் இந்தியா முதலில் பெற்றுக்கொண்டது.இறுதி யுத்தத்தின் விளைவுகளை அதிகமாக சீனா பெற்றுக்கொண்டது.
கடந்த ஆண்டு நடந்த அரகலயவின் கனிகளை பெருமளவுக்கு மேற்கு நாடுகள் பெற்றுக் கொண்டன. இவ்வாறு கடந்த சுமார் அரை நூற்றாண்டு காலத்தைத் தொகுத்துப் பார்த்தால் தெளிவாகத் தெரியும் உண்மை என்னவென்றால், இலங்கைத் தீவில் யார் எப்படிப் போராடினாலும் பூகோள,புவிசார் அரசியலை வெற்றிகரமாகக் கையாள்வதில்தான் போராட்டத்தின் இறுதிவெற்றி தங்கியிருக்கின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |