தென்னிலங்கை அரசியல்வாதிகளால் ஆபத்தான நிலையில் இலங்கை
இலங்கையில் பொருளாதாரம் மிகவும் மோசமான கட்டத்தை தாண்டி வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. எனினும் அதனை சீர்செய்ய ஒழுங்கான அரசாங்கம் இன்றி நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்திரமான அரசாங்கம் இன்மையால் உலக நாடுகள் இலங்கைக்கு உதவுவதில் பின்னடித்து வருகின்றனர்.
இந்நிலையில் பசியின் பிடியில் பெருமளவு மக்கள் சிக்கித் தவித்து வரும் நிலையில், அரசியல்வாதிகள் தமது சுகபோக வாழ்க்கையில் குறியாக இருகின்றனர்.
ஸ்திரமன்ற அரசாங்கம்
அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வதில் அரசியல்வாதிகள் போட்டி வருகின்றனர். அவர்களின் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக நாடு நாளுக்கு நாள் மோசமான கட்டத்தை அடைந்து வருகிறது.
தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான ரணில் விக்ரமசிங்கவை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக்கி தமக்கான சலுகைகளை பெற்றுக்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்தவர்கள் திட்டமிட்டிருந்தனர். எனினும் அவர்களின் கோரிக்கைக்கு ரணில் விக்ரமசிங்க இணக்கம் வெளியிடாத நிலையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த அரசாங்கத்தின் போது பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் பிரதான அமைச்சு பதவிகள் மற்றும் ராஜாங்க அமைச்சுகளை கோரியுள்ளனர். எனினும் அதனை ஏற்க ஜனாதிபதி ரணில் மறுத்து வருகிறார்.
சமரச பேச்சுவார்த்தை
இவ்வாறான நிலையில் ரணிலை பதவியிலிருந்து வெளியேற்ற வேலைத்திட்டங்களை அக்கட்சியின் சில குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜனாதிபதியுடன் சமரச பேச்சுகள் மூலம் தமக்கான அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மறுபுறத்தில் தேசிய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ளாமல் முழு ஆதரவு வழங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இணக்கம் வெளியிட்டிருந்தார். எனினும் அவரை தேசிய அரசாங்கத்தில் இணைய விடாமல் சில தரப்பினர் குழப்பி வருவருடன், தேசிய அரசாங்கம் அமைய பெறுவதை தடுத்தும் வருகின்றனர்.
தொழிற்சங்க போராட்டம்
இன்னுமொரு பக்கத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதி பதவியிலிருந்து ரணிலை அப்புறப்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். அதற்காக பல்வேறு ஆர்ப்பாட்டங்களை தொழிற்சங்கள் மூலம் ஊக்குவித்து வருகின்றனர்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள மக்கள் நாளாந்தம் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். அதுபற்றி எந்தவொரு அரசியல்வாதியும் சிந்திக்காத நிலையில், தமது அரசியல் இருப்பினை மட்டும் நோக்கமாக கொண்டு செயற்படுகின்றனர்.
இந்நிலையில் பொதுத் தேர்தல் ஒன்று இடம்பெறும் பட்சத்தில் இவ்வாறான அரசியல்வாதிகளுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என மக்கள் தமது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.