ரணில் ஜனாதிபதியானது நாட்டின் அதிஷ்டம்! பிரதமராக விரும்பும் சஜித்திற்கு ஏற்பட்டுள்ள பயம்
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானது நாட்டின் அதிஷ்டம் என தொழில் உறவுகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சஜித்தின் பயம்
சஜித் பிரதமராக விரும்புகிறார். ஜனாதிபதியாக விரும்புகிறார். ஆனால் பயப்படுகிறார். அரசில் இணைந்தால் பிரபலமற்ற தீர்மானங்களை தற்போது எடுக்க வேண்டியேற்படும். வட் வரியை அதிகரித்தால் சிக்கல் ஏற்படும். அதனால் அவர் தயங்குகிறார்.
அது கஷ்டமான தீர்மானம். ஆனாலும் அதனை எடுக்க வேண்டியிருக்கிறது. பிச்சைக்காரனுக்கு எப்போதும் தனது காயம் ஆறக்கூடாது என்பதே விருப்பமாக இருக்கும். நாங்கள் அந்த காயத்தை ஆற்ற விரும்புகிறோம்.
ரணில் ஜனாதிபதியானது அதிஷ்டம்
சஜித் ஜனாதிபதியாக வந்திருந்தால் இவ்வாறான கடினமான தீர்மானங்களை எடுத்திருக்கமாட்டார். நாம் அவரிடம் அப்படி ஒரு பண்பை காணவில்லை.
தமிழ் அமைப்புகளின் தடை நீக்கம் தொடர்பான தீர்மானங்களை அவரால் எடுக்க முடியாது. தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க அவர் பயப்படுகிறார்.
கடினமான தீர்மானங்கள் எடுப்பதற்கு முன்வர வேண்டும். நாட்டின் அதிர்ஷ்டத்திற்கே ரணில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
அரசாங்கத்திற்கு மறைமுகமாக ஆதரவு வழங்கும் ஐக்கி மக்கள் சக்தியின் உறுப்பினர்கள்
ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பின்போதும் ஐக்கிய மக்கள் சக்தியின் சிலர் எமக்கு ஆதரவாக வாக்களித்தனர். பெயர்களை குறிப்பிட முடியாது.
இப்போதும் சிலர் தயாராக இருக்கின்றனர். எம்முடன் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நாம் கட்சியாக அவர்களை இணைத்துக் கொள்ளவே விரும்புகிறோம்.
ஆனால் ஒரு சிலர் தாம் தலைவர் பதவியை அடைய வேண்டும் என்பதற்காக தமது கட்சியில் உள்ளவர்களை அரசாங்கத்துடன் இணைய விடாமல் தடுக்கின்றனர்.
அவர்கள் சிறுவயதிலிருந்தே உயர் பதவிக்கான உடைகளை தைத்து வைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நேரடியாக தீர்மானங்களை எடுக்கின்றவர்களே வர தலைவர்களாக வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.