மகிந்தவின் அடுத்தகட்ட திட்டம் அம்பலம்
காலி முகத்திடல் போராட்டக்காரர்களை இணைத்துக் கொண்டு அரசியல் மாற்றம் செய்வது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அவதானம் செலுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடி, முடிந்தால் அந்த போராட்டக்காரர்களை தமது கட்சியுடன் இணைத்துக் கொள்வது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் கட்சியின் உயர்மட்ட தலைவர்களுக்கு மகிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.
மகிந்தவின் திட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வலுப்படுத்தும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அடிப்படை விடயமாக போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான அமைப்பு ஒன்றை தயாரிக்க வேண்டும் என மகிந்த அறிவுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் பூரண மேற்பார்வையின் கீழ், கட்சியின் வலுவூட்டல் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் விசேட அமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டுமென மகிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.