அவலை நினைத்து உரலை இடிக்கிறார்! சீனத் தூதருக்கான கண்டன அறிக்கையில் சரவணபவன்
ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, உபத்திரவம் கொடுக்காமல் சீனா ஒதுங்கியிருக்கலாம். அதைவிடுத்து மேற்கு நாடுகளுடனும், இந்தியாவுடனும் முரண்படுவதாக நினைத்துக் கொண்டு தமிழ் மக்களை வதைக்கும் வகையில் நடந்துகொள்கிறது.
கடன் வாங்கிய சிங்கள தேசத்துடன் - இலங்கை அரசுன் மாத்திரம் தனது நாட்டாண்மையை சீனா மட்டுப்படுத்திக் கொண்டால் நன்று என இலங்கைத் தமிழசுக் கட்சியின் முக்கியஸ்தரும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் அண்மையில் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
"மனித உரிமை விவகாரங்களை முகமூடியாக பாவித்து சில நாடுகள் இலங்கை விவகாரத்தில் தலையிடுகின்றன என்று சீனத் தூதுவர் குற்றம் சுமத்துகின்றார். இது சட்டியைப் பார்த்து பானை கறுப்பு என்ற கதையைப்போல் உள்ளது.
கடன்பொறியால் ஒரு நாட்டைக் கபளீகரம் செய்யும் சீனா, இதுபோன்று குற்றம் சுமத்துவதற்கு எந்த அருகதையும் அற்றது. அமிர்தலிங்கம் ஐயாவின் ஜனன நினைவு தின நிகழ்வில் கடந்த வாரம் நான் ஓர் விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தேன்.
சீனாவுக்குப் பின்னடைவு
சீனாவின் உளவுக் கப்பலின் வருகையோடு இலங்கையைச் சுற்றிய பூகோள அரசியல் கொதிநிலைக்குச் சென்றுள்ளது. அதை நிரூபிக்கும் வகையிலேயே சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
இலங்கைக்கு சீன உளவுக் கப்பல் வந்து சென்றிருந்தாலும் அந்த விடயத்தில் சீனா சில பின்னடைவுகளைச் சந்திருப்பதால், இந்தியா மற்றும் மேற்கு நாடுகள் மீது சீறிப் பாய்திருந்தது.
இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆபாந்தவர்களாக இந்தத் தரப்புக்களே இப்போது இருப்பதால், அவர்களைச் சீண்டுவது என்பது ஒருவகையில் தமிழ் மக்களைச் சீண்டுவதற்கு சமதையானதே. அதற்கும் மேலாக, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நீதிக்கான நீண்ட நெடிய பயணத்தில் இதுவரையில் பங்காளர்களாக இருந்து வருபவர்களும் அந்தத் தரப்பினரே.
அந்தத் தரப்புக்கள் கையில் எடுத்துள்ள மனித உரிமை விவகாரத்தை, நையாண்டி செய்து அல்லது கீழ்த்தரமான முறையில் விமர்சித்து அவற்றைக் கைவிடச் செய்யலாம் என்று சீனா கனவிலும் நினைக்கக் கூடாது.
இதுவரை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசுக்கு முட்டுக் கொடுத்துவருவது சீனா. பாதிக்கப்பட்ட தமிழ் தரப்புக்கள் சில சந்தர்ப்பங்களில் இந்த விடயங்களில் உதவிகோரியபோது, ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவது தமது கொள்கையல்ல என்று சீனா பலமுறை சொல்லியிருக்கின்றது.
ஆனால், இலங்கை அரசுக்குத் தனது கொள்கையை மீறி பல தடவைகள் உதவியிருக்கின்றது. இன்னமும் உதவிக் கொண்டிருக்கின்றது. தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில், மனித உரிமை விவகாரம் அவசியம்தானா என்று சீனத் தூதுவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
மனித உரிமைகள் தொடர்பில் பேசுவதற்கு தகுதியற்றவர்கள் அவர்கள். ஆனாலும், இப்போது மனித உரிமை விவகாரம் அவசியமா என்று கேள்வி எழுப்பும் தூதுவர், தமிழ் மக்களின் நீதிக்கான பயணம் இன்னமும் முடிவுறாமல் இருப்பதற்கு தாங்களும் ஓர் காரணம் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.
இலங்கை அரசுக்கான சீன ஆதரவு
இலங்கையை கட்டுப்படுத்தி இந்தியாவுக்கு குடைச்சல் கொடுப்பதற்காக, அரசாங்கத்துக்கு கண்மூடித்தனமாக ஆதரவை சீனா வழங்கி வந்து கொண்டிருக்கின்றது.
அதன் விளைவுகளாலேயே இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ளது பொருளாதார நெருக்கடி. தங்களால் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகளைச் சாட்டாக முன்வைத்து, தமிழ் மக்களின் விடயங்களை நீர்த்துப்போகச் செய்யும் நிகழ்சி நிரலை முன்னெடுக்கும் சீனாவை ஒதுக்கவேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தமிழர் தாயகத்தில் தலையெடுத்தும் பார்த்திராத சீனா, இப்போது மெல்ல மெல்ல, தமிழர்களுக்கு கைகொடுக்கும் இந்தியாவுக்கு குடைச்சல் கொடுப்பதற்காக, தமிழ் மக்களுக்கு உதவுகின்றோம் என்ற போர்வையில் நுழைய முயல்கின்றார்கள். எங்கள் கையை வைத்தே எங்களின் கண்ணை குத்த நினைக்கிறார்கள்.
ஆனால், அவர்களின் உண்மை முகம் சீனத் தூதுவரின் கருத்தின் ஊடாக அம்பலப்பட்டிருக்கின்றது. எனவே எத்தகைய முகமூடியுடனும் எமது தேசத்தில் கால் பதிக்க சீனாவை அனுமதிக்கக் கூடாது, அனுமதிக்கவும் முடியாது" - என்றுள்ளது.