மகிந்தவின் அணியில் இருந்து ரணிலுக்கு மீண்டும் ஆதரவுக் கரம்
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடியை எதிர்கொண்ட போது தமது எதிர்கால அரசியலை கருத்திக் கொண்டு பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஒரு தரப்பினர் ஹெலிகொப்டர் சின்னத்தில் அரசியல் கூட்டணி ஒன்றை அமைத்தார்கள்.
ஹெலிகொப்டர் சின்னத்தில் அமைக்கப்பட்ட கூட்டணி செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபடவில்லை. கூட்டணி பிளவடைந்துள்ளது.
சவால்களை தைரியமாக எதிர்கொண்ட ரணில்
எம்மை விட்டு விலகி சென்ற டலஸ் அழகபெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையினர் மீண்டும் எம்முடன் ஒன்றிணைய கோரிக்கை விடுத்துள்ளார்கள். விலகிச் சென்றவர்கள் தாராளமாக எம்முடன் மீண்டும் ஒன்றிணையலாம்.
சவால்களுக்கு மத்தியிலேயே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தோற்றம் பெற்றது. ஆகவே எதிர்வரும் காலங்களில் தோற்றம் பெறவுள்ள சவால்களையும் சிறந்த முறையில் வெற்றிக் கொள்வோம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், எமக்கும் இடையில் அரசியல் ரீதியில் வேறுபாடு காணப்படலாம் நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டிருந்த வேளை சவால்களை தைரியமாக வெற்றிக் கொண்டார். ஆகவே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என குறிப்பிட்டார்.