கோட்டாபய மீண்டும் இலங்கை வருவதை ரணில் விரும்பாமல் இருந்தது ஏன்...! ஜனாதிபதி தரப்பிலிருந்து வெளியான தகவல்
கோட்டாபய ராஜபக்ச முதலில் நாட்டை விட்டு வெளியேறியிருக்கக் கூடாது. அவர் இந்த நாட்டு குடிமகன் என ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய பாதுகாக்கப்பட வேண்டியவர்..
இந்த நாட்டின் குடிமகன் என்ற வகையில் கோட்டாபய ராஜபக்ச அரசமைப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டியவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடிமக்களைப் பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை. நான் கோட்டாபயவின் பேச்சாளர் அல்ல. எனினும் அவர் பொதுவாழ்வில் அல்லது அரசியலில் ஈடுபடுவாரா என்பது எனக்குத் தெரியாது. அப்படிச் செய்ய மாட்டார் என எதிர்பார்க்கிறேன்.
கோட்டாபய ராஜபக்ச தற்போது நாட்டிற்கு வருவது நல்லதல்ல என்பது போன்ற கருத்தினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
ரணிலின் கருத்துக்கு காரணம்
அப்படிச் சொல்ல காரணம் இருந்தது. அப்போது நாட்டில் உக்கிரநிலை காணப்பட்டது. வீதிகளில் வரிசைகளும் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றுக் கொண்டிருந்தன.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றிருந்தன. ஏற்கனவே ஜூலை மாதம் நடைபெற்ற சம்பவங்களால் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை ஒரு மாதம் பிந்திப் போனது.
இச் சூழல் முன்னாள் ஜனாதிபதியின் வருகைக்கு உகந்தகாலமாக இருக்கவில்லை. இதனால்தான் ஜனாதிபதி, கோட்டாவின் வருகைக்கு இது உகந்த காலமல்ல என்ற கருத்தை வெளியிட வேண்டியதாயிற்று என சாகல ரத்னாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.