கோட்டாபய ராஜபக்சவை தவறாக வழிநடத்திய சிலர்! கோரிக்கையை ஏற்காத ஜனாதிபதி
சேதனப் பசளை விவகாரத்தில் எமது அறிவுரையை அன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செவிமடுக்கவில்லை. தொழில் வல்லுநர்கள் சிலரால் அன்றைய ஜனாதிபதி தவறாக வழிநடத்தப்பட்டார் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அன்றைய ஜனாதிபதி மீது பழியைப் போட முடியாது
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அப்போதைய ஜனாதிபத கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்த போது, விவசாயிகள் இரசாயன உரம் கோரினால் வழங்குங்கள் என நாங்கள் கூறினோம் ஆனால் அன்றைய ஜனாதிபதி எங்களின் கோரிக்கையை செவிமடுக்கவில்லை.
சேதன உரத்திற்கு சர்வதேச அங்கீகாரம் இருப்பதாக சில வல்லுநர்கள் பல விளக்கங்களை அளித்தனர். எனவே, முன்னாள் ஜனாதிபதி இந்த தொழில் வல்லுநர்கள் சிலரால் தவறாக வழிநடத்தப்பட்டார்.
மேலும் நாங்கள் அன்றைய ஜனாதிபதி மீது பழியைப் போட முடியாது. தொழில் வல்லுநர்கள் ஏதாவது சொன்னால், ஜனாதிபதி அதைக் கேட்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகள் மற்றும் அறிவுரைகள் பின்பற்றப்படாவிட்டால், அவர்கள் எங்கள் மீது பழியைப் போடுகிறார்கள் என குறிப்பிட்டார்.