அமெரிக்க கடற்படை மின் பொறியாளர் இலங்கையில் மர்மமான முறையில் கொலை
அமெரிக்காவில் கடற்படை மின் பொறியாளராக கடமையாற்றி ஓய்வு பெற்ற ஒருவர் படுகொலை செய்யப்பட்டு மல்சிறிபுர பிரதேசத்தில் உள்ள அவரது தோட்டத்தில் புதைக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மல்சிறிபுர ரெஸ்வத்த பிரதேசத்தில் வசித்து வந்த 72 வயதான ரன்பட்டி தேவயலாகே சித்ரானந்த ஜயரத்ன என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் குடியுரிமை பெற்றவர் என்பதுடன் அவர் அமெரிக்காவில் பணிபுரிந்து ஓய்வு பெற்று 2019 இல் இலங்கைக்கு வந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
பணியில் இருந்து ஓய்வு பெற்று இலங்கைக்கு வந்த அவர், மல்சிறிபுர ரெஸ்வத்த பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் காலத்தை கழித்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
படுகொலை செய்யப்பட்ட நபர் இலங்கையில் வசிக்கும் தனது குடும்ப உறுப்பினர்களுடன் நெருங்கிய உறவை பேணி வந்துள்ளார்.
கடந்த முதலாம் திகதி முதல் அவரிடமிருந்து எந்த தகவலும் கிடைக்காததால், மாலம்பே பிரதேசத்தில் வசிக்கும் அவரது பெரியம்மாவின் மகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அநுராதபுரத்திற்கு சுற்றுலா செல்வதாக வீட்டின் உரிமையாளர் கூறிவிட்டு கடந்த வாரம் முதலாம் திகதி வீட்டை விட்டு வெளியேறியதாக மல்சிறிபுர வீட்டில் பணிபுரிந்த நபர் தெரிவித்துள்ளார்.
உயிரை மாய்ந்த நபர்
அந்த வாக்குமூலத்தில் சந்தேகம் அடைந்த பொலிஸார், நேற்று முன்தினம் வீட்டுக்குச் சென்று மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். அப்போது, வீட்டின் அறையொன்றில் உள்ள மின்கம்பத்தில் வாக்குமூலம் வழங்கிய நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வெல்லவ பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய மிலிந்த என்ற நபரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருநாகல் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபுல் சந்தன அபேசிங்கவின் நேரடி வழிகாட்டலில் நேற்று மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் உத்தியோகபூர்வ பொலிஸ் நாயின் உதவியும் பெறப்பட்டது.
நாயின் தடத்தை பின்தொடர்ந்த பொலிஸார் ஓய்வுபெற்ற மின் பொறியியலாளர் உயிரிழந்த நிலையில் அவரது சொந்த தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.