நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு கைது நடவடிக்கைகள் (Photos)
நாளுக்கு நாள் பல்வேறு குற்றச்செயல்கள் பதிவாகி வருகின்றது.
யாழ்ப்பாணம்
நீதிமன்ற வழக்கில் உள்ள சுமார் 70 பவுண் நகைகளை மீட்டுத்தருவதாக கூறி பெருமளவு பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் காங்கேசன்துறை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள 70 பவுண் தங்க நகைகளை விடுவித்துத் தருவதாக கூறி பெருந்தொகை பணத்தை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டிலேயே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களான பெண்கள் இருவரும் காங்கேசன்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
சந்தேகநபர்கள் 36 மற்றும் 38 வயதுடைய வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (05) பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
வல்வெட்டித்துறை பொலிஸாரும் காங்கேசன்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு
முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு பேருந்தில் உமிக்குள் மறைத்து சட்டவிரோத மதுபானம் கொண்டு சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரியாலை - மாம்பழம் சந்தியில் வைத்து 3 சந்தேகநபர்களையும் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டதுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல் உமி மூடையில் நூதனமாக மறைத்து கொண்டு செல்லப்பட்ட சட்டவிரோத மதுபானமே இவ்வாறு கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களைச் சான்றுப் பொருட்களுடன் யாழ். நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு- வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டுமாவடி பிரதேசத்தில் வீடு உடைத்து 44 அரை பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இக் கைது நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, தங்க ஆபரணங்கள் மற்றும் மோட்டர் சைக்கிள் ஒன்றை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம்
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிலாவரை மற்றும் பொய்ஸி பகுதிகளில் சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது ஒருவரிடமிருந்து 6 போத்தல் சட்டவிரோத மதுபானமும் மற்றையவரிடமிருந்து 14 போத்தல் சட்டவிரோத மதுபானமும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 42 மற்றும் 43 வயதுடையவர்கள் ஆவர். கைது செய்யப்பட்டவர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டனர்.
மேலும், சந்தேகநபர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



