பெரும் அதிர்ச்சியில் தமிழ் அரசியல்வாதிகள்! தப்பியோடப் போவது யார்....!
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்து ஓய்ந்துள்ள நிலையில், பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
அடுத்து வரும் ஆறு வாரங்களில் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசியல்வாதிகள் தமது நாடாளுமன்ற பதவிகளை பெற்றுக்கொள்ள மக்களிடம் வாக்குகளை கேட்கத் தயாராகின்றனர்.
இவ்வாறான நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றார்கள் என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.
புள்ளிவிபரங்கள்
முன்னரை விட தற்போது மாறுபட்ட அரசியல் களம் உருவாகி உள்ளது. இலகுவாக மக்களை ஏமாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் எவ்வாறான பொய்களை கூறி தமது இருப்புக்களை தமிழ் அரசியல்வாதிகள் தக்க வைக்கப் போகின்றார்கள் என்பதே தற்போதுள்ள சவாலாகும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் அடிப்படையிலான புள்ளிவிபரங்களை நோக்கும்பட்சத்தில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளமை தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என தாம் என ஏமாற்றித் திரியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தமிழரசு கட்சி மக்களால் வெறுக்கப்படும் ஒரு நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் போது வேட்பாளரான சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிக்குமாறு இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கோரியிருந்தனர்.
தமிழர் பகுதி
இவ்வாறான நிலையில் வடக்கு, கிழக்கில் சஜித் முன்னிலை பெற்ற போதும் இரண்டாம் மூன்றாம் நிலையை எட்டியவர்களின் வாக்கு வீதங்கள் அதிகரித்துள்ளமை தமிழரசு கட்சிக்கு பெரும் தோல்வியாக மாறியுள்ளது.
தமிழர்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் சஜித் முன்னிலை பெற்ற போதும், தமிழரசு கட்சியிற்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குகளின் விபரம் வருமாறு,
யாழ். மாவட்டத்தில் பொது வேட்பாளராக களமிறங்கிய பா.அரியநேத்திரன் 116688 வாக்குகளையும், ரணில் விக்ரமசிங்க 84558 வாக்குகளையும், அநுரகுமார திசாநாயக்க 27086 பெற்றனர்.
வன்னி மாவட்டத்தில் ரணில் விக்ரமசிங்க 52573 வாக்குகளையும், பா. அரியநேத்திரன் 36377 வாக்குகளையும், அநுரகுமார திசாநாயக்க 21412 வாக்குகளையும் பெற்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணில் விக்ரமசிங்க 91132 வாக்குகளையும், அநுரகுமார திசாநாயக்க 38832 வாக்குகளையும், பா. அரியநேத்திரன் 36905 வாக்குகளையும் பெற்றனர்.
வாக்கு எண்ணிக்கைகள்
திருகோணமலை மாவட்டத்தில் அநுரகுமார திசாநாயக்க 49886 வாக்குகளையும், ரணில் விக்ரமசிங்க 40496 வாக்குகளையும், பா.அரியநேத்திரன் 18524 வாக்குகளையும் பெற்றனர்.
வடக்கு, கிழக்கில் எந்தவொரு அரசியல் கட்சிகளுடனும் தேசிய மக்கள் சக்தி கட்சி இணைந்து செயற்படவில்லை. ஆனாலும் அதிகப்படியான அது வாக்குகளை பெற்றுள்ளது.
இனிவரும் காலங்களில் இது பல மடங்காக அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் தற்போது தென்பட ஆரம்பித்துள்ளன.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதியாக உள்ள அநுரகுமார திசாநாயக்க வெறும் நான்கு இலட்சம் வாக்குகளை பெற்றார்.
அவர்களின் அசாத்திய வளர்ச்சி காரணமாக ஐந்து ஆண்டுகளில் சுமார் 50 இலட்சம் வாக்குகளை பெறுக்கொள்ளும் நிலைமை மாறியுள்ளது. இதில் புதிதாக வாக்களிக்க தகுதி பெற்ற இளம் பாராயத்தினரும் அதிகளவில் அடங்கும்.
வடக்கு - கிழக்கு
இவ்வாறானதொரு மாற்றம் தமிழர்கள் மத்தியிலும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. தற்போதுள்ள இளைஞர்களின் மனநிலையிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன.
வடக்கு - கிழக்கு தமிழர்களின் நிலைமை குறித்து தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தெரிவிக்கையில்,
எமது கட்சி, தமிழ் மக்கள் மத்தியில் பரீட்சியம் இல்லாத ஒன்று. எனினும், ஜனாதிபதியின் அநுரகுமாரவின் அணுகுமுறைகள் தொடர்பில் அவர்கள் மத்தியில் பாரிய மாற்றம் ஏற்படும். அடுத்து வரும் தேர்தல்களில் அதன் வெளிப்பாடு நேரடியாக தெரிய வரும் என உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.
இளைஞர்கள் மத்தியில் தற்போது மெருகூட்டப்பட்ட புது இரத்தம் பாய தொடங்கியுள்ளது. இந்நிலையில், வெள்ளைவேட்டி கட்டிய வயதான அரசியல்வாதிகளின் கருத்துக்களுக்கு அவர்கள் செவிமடுப்பார்கள் என்பது சந்தேகம்.
அடுத்து வரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் மக்களால் முற்றாக நிராகரிக்கப்படும் நிலையே தற்போது காணப்படுகிறது. இதற்கு பல வலுவான காரணங்கள் உள்ளன.
இழுபறிநிலை
தமது சொந்த சுயநலத்திற்காக மக்களை ஈடு வைத்து சுகபோகங்களை அனுபவிக்கும் தமிழ் அரசியல்வாதிகளே தற்போது உள்ளனர்.
மக்கள் நலன்சார்ந்து எந்தவிதமான காத்திரமான நடவடிக்கைகளையும் அவர்கள் எடுப்பதில்லை. அதனையும் தாண்டி தமது கட்சிக்குள்ளேயே ஒற்றுமை இல்லை. தமது தலைமை யார் என்பதை கண்டுபிடிக்க முடியாத நிலையில் பல வருடங்களாக இழுபறிநிலை தொடர்கிறது.
இந்நிலையில் இவ்வாறான அரசியல்வாதிகளை தொடர்ந்தும் நாடாளுமன்றம் அனுப்ப வேண்டுமா என்பது குறித்து மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.
அதற்கான வாய்ப்பாக நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை வாய்ப்பாக மக்கள் பயன்படுத்தி கொள்வர்.
தற்போதைய நிலையில் தேசிய மக்கள் சக்தியின் சித்தாந்தங்களை தமிழ் இளைஞர்கள் மத்தியில் விதைக்கும் பணியினை பலர் முன்னெடுத்து வருகின்றனர்.
இளைஞர் அணி
இதற்காக இளைஞர் அணியொன்றையும் உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான அரசியல் மாற்றங்களை சுயநலத்திற்காக செயற்படும் தமிழ் அரசியல்வாதிகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதே பெரும் கேள்வியாக உள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் அடுத்த வரும் தேர்தல்களில் ஒற்றுமையில்லாத வயதான அரசியல்வாதிகளுக்கு ஓய்வு வழங்கி, மக்கள் நலன் சார்ந்து செயற்படும் இளைஞர்களை தேர்தல் களத்தில் இறங்க வேண்டும் என்ற கோஷம் வலுப்பெற்றுள்ளது.
அது சாத்தியமானால் தற்போது தமது சுயத்திற்காக மட்டுமே அரசியல் செய்யும் தமிழ் அரசியல்வாதிகள் காணாமல் போய்விடுவார்கள் என்பது யதார்த்தம். அடுத்து வரும் தேர்தல் களம் எவ்வாறு அமையப் போகின்றது என்பதை குறித்து பொறுத்திருந்து பார்ப்போம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |