வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தினை திறக்க இழுபறி நிலை
தனிப்பட்ட நலனை முன்னிறுத்தியமையால் வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தினை திறக்க முடியாமல் உள்ளதாக வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தெரிவித்தார்.
மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்திலே பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
295 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையமானது, சில அரசியல் தலையீடுகள் மற்றும் இனம் சார்ந்த பிரச்சினைகளாலும், வியாபாரிகள் அல்லது தனிப்பட்ட நலனை முன்னிறுத்தியமை போன்றவற்றினால் அதனை ஆரம்பிப்பதற்கு தற்போது வரை ஒரு இழுபறி நிலை காணப்படுகின்றது.
மேலும் இது தொடர்பாக பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை அரசாங்க அதிபரினால் முன்னெடுக்கப்பட்ட போதும் அதனை திறக்க முடியாத நிலையே காணப்படுகின்றது.
எனவே அடுத்த மாத நடுப் பகுதியிலே இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிபரும் இணைந்து இது தொடர்பாக கலந்துரையாடுவதுடன், இப்பொருளாதார மத்திய நிலையத்தினை திறப்பதற்கான நடவடிக்கையினை அடுத்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பொருளாதார மத்திய நிலையத்தினை திறப்பதற்கான நடவடிக்கைக்கு சம்மந்தப்பட்ட அனைவரையும் அழைத்து கலந்துரையாடுவதன் மூலமாக இதற்கான தீர்வினை இலகுவாக எடுக்க ஏதுவாக இருக்கும் என சுட்டிக்காட்டினார்.
மேலும் விரைவில் பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.