கோவிட் பரவலில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை - வைத்திய அதிகாரிகள் சங்கம்
கோவிட் தொற்றாளர்கள் மற்றும் தொற்றால் ஏற்பட்டு மரணங்களின் புள்ளிவிபரங்களுக்கு அமைய இலங்கை இந்தியாவை தாண்டி மிகவும் ஆபத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சனத் தொகையுடன் ஒப்பிடும் போது தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் இலங்கை இந்தியாவை விட முன்னிலையில இருப்பதாக அந்த சங்கத்தின் உப தலைவர் மருத்துவர் நவீன் டி சொய்சா கூறியுள்ளார்.
நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறினாலும் வீதிகளில் அவ்வாறான நிலைமையை காண முடியவில்லை.
பயணக் கட்டுப்பாடுகளை மீறும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எமக்கு இல்லாமல் போவது நாமே நேசிக்கும் உயிர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்தியாவில் ஒரு மில்லியன் நோயாளிகளுக்கு 2.01 வீதமானவர்கள் மரணிக்கின்றனர். அது இலங்கையில் ஒரு மில்லியனுக்கு 1.91 வீதம் எனக் கூறினாலும் மாவட்ட மட்டத்தில் ஏற்படும் மரணங்களை கணக்கிடும் போது அந்த எண்ணிக்கையானது அதிகரித்து காணப்படுகிறது.
காலி மாவட்டத்தில் இந்த எண்ணிக்கையின் வீதம் 7.01 என்பதுடன் கண்டியில் 4.49 வீதம். கொழும்பில் 2.43 வீதமும், கம்பஹாவில் 2.46 வீதமும், களுத்துறையில் 3.34 வீதமும் மரணங்கள் ஏற்படுகின்றன.
கேகாலை, நுவரெலியா, பதுளை, திருகோணமலை, வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் இந்தியாவை விட மரணங்கள் அதிகரித்துள்ளன.
இந்தியாவில் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 80.09 வீதமான நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இலங்கையில் அந்த எண்ணிக்கையானது 136.68 வீதமாக காணப்படுகிறது.
இது இந்தியாவை விட ஒன்றரை மடங்கு அதிகம். இந்த பயங்கரமான நிலைமையை மக்கள் மறந்துள்ளனர்.
மக்கள் அதனை மறக்க இடமளித்தமையே இதற்கு காரணம். தற்போது பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் அது எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதில் சிக்கல் காணப்படுகிறது எனவும் நவீன் டி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
