தேர்தல்வாதிகளே சிந்தியுங்கள்..!
அன்பும் பண்பும் நிறைந்த வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள், அத்துடன் வடக்கு கிழக்கு வாழ் தேர்தல்வாதிகள் யாவருக்கும் வணக்கம்!
மூன்று தசாப்தங்களிற்கு மேலாக சர்வதேச பரப்பில், தமிழீழத்திற்கான அங்கீகாரம் உட்பட, மனித உரிமை, தமிழர்களது சுயநிர்ணய உரிமையென பல தளங்களில், பல நாடுகள், பல நிறுவனங்கள், பல முக்கிய புள்ளிகளென, சர்வதேசத்தில் அன்று இன்றும் செயற்பட்டுவரும் அடிப்படையில், சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.
இவற்றை உங்களில் சிலர் ஒட்டுமொத்தமாகவும், அரைகுறையாகவும் நிராகரிக்கலாம். இதேவேளை, சிலர் அல்ல பலர் முழுதாக ஏற்றுக்கொள்வார்கள்.
முதலில், இன்றும் இலங்கைதீவில் வாழும் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைகளையோ, எமது உடன் பிறப்புக்களான மலையக தமிழர்களின் பிரச்சினைகளையோ இன்றும் உலகம் அறியவில்லை, தெரிந்திருக்கவில்லை என்பது ‘முழு பூசனிக்காயை சோற்றில் புதைப்பதற்கு சமனானது’.
செயற்பாட்டின் பெயரில், பணம் சேகரிப்பு வசுலிப்பு செய்யும் போலி செயற்பாட்டாளர்களினாலும், தேர்தல்வாதிகளினாலும் தமது சுயநலத்திற்காக கூறப்படும் கற்பனை கதைகளே இவை.
மேலும் தொடர்வதற்கு முன் - சரித்திரங்களின் அடிப்படையிலும், சிங்கள பௌத்த அரசுகளினாலும், அவர்களது எடுபிடிகளான அரச புலானாய்வு பிரிவுகளும், ஆயுதபோராட்டத்தின் ஆரம்பத்தை தொடர்ந்து, ‘பிரித்து ஆளும் அடிப்படையில்’, தமிழ் தேசியத்திலிருந்து, எமது இஸ்லாமிய சகோதரர்களை இராண்டாக பிரித்து செயற்பட ஊக்குவித்தார்கள் என்பது தான் யதார்த்தம்.
இதற்கு நல்ல உதாரணம், இலங்கை தீவில் வடக்கு கிழக்கு வாழ் இஸ்லாமியர்களுக்கென ஓர் அரசியல் கட்சி, 1981 ஆம் ஆண்டிற்கு முன்பு அறவே இருந்திருக்கவில்லை.
இந்த அடிப்படையில், இங்கு பெயரிட்டு கூறப்படும் தமிழர்கள் என்பது, இஸ்லாமிய சகோதரர்களை உள்ளடக்குகின்றது என்பதை முதலில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
இவற்றை வடக்கு கிழக்கு வாழ் தேர்தல்வாதிகளும், கட்சிகளும் மனதில் கொள்ள வேண்டும்.
யார் இந்த தேர்தல்வாதிகள்?
யார் இந்த தேர்தல்வாதிகள்? அரசியல் என்பதன் வரவிலக்கணம் அறவே தெரியாது, தமது கட்சி அரசியலை தெளிவுப்படுத்த முடியாது புசத்துபவர்களும், தமிழ் மக்களின் ஐக்கியத்திற்கு பாதகம் விளைவிப்பவர்களும், தமது சுயநல நோக்கங்களிற்காக தமக்கென ஒரு அரசியல் கட்சி ஆரம்பிப்பவர்களும், தாம் கூறுவது மட்டுமே சரி என்பதுடன், மற்றவர்கள் யாவரிலும் ஏதோ ஒரு விதத்தில் பிழைபிடிப்பதுடன், எமது மக்கள் சத்வீக ஜனநாயக பதைகளில் அறவே அடைய முடியாத இலட்சியம் பற்றி இரவு பகலாக புலம்புவதுடன், மக்களின் நளாந்த வாழ்வாதார அடிப்படை தேவைகளை அறவே புறம்தள்ளி - மக்களை தமக்கு வாக்களிப்பதற்கு மட்டும் பாவிப்பவர்களே இந்த தேர்தல் வாதிகள்.
அத்துடன் தாம் செயற்பட தொடங்கிய கால பகுதி மட்டும் தான் தமிழர்களின் பொற்காலமென எண்ணுபவர்களும் இவர்களே.
இவர்கள் யாராக இருந்தாலும், இலங்கை நாடாளுமன்றத்தில் ஆறாவது திருத்த சட்டத்தின் கீழ் சத்திய பிரமாணம் செய்த பின்னர், வெளியில் விதண்டாவாதம் கதைப்பதுடன், ஒற்றையாட்சி, வடக்கு கிழக்கு, சமஸ்டி எல்லாம் கூறுவது நகைப்பிற்குரியது.
இவர்களால் முடியுமானால் தந்தை செல்வா போல், தமது நாடாளுமன்ற ஆசனத்தை ராஜினமா செய்து, மக்களிற்கு முன்மாதிரியாக காண்பித்து கொண்டு, இவற்றை கூறினால் மக்கள் மட்டுமல்ல சர்வதேசமே இவர்களின் சொற்பொழிவிற்கு செவி சாய்ப்பார்கள்.
இன்று வடக்கு கிழக்கில் ஆளுக்கு ஒரு கட்சியும் ஆளுக்கு ஒரு கொள்கையும், உருவாகியுள்ளதற்கு இவர்களது சுயநலங்களே முக்கிய காரணிகள்.
மிக நீண்டகாலமாக எனது கட்டுரை, செவ்விகளில் கூறிவரும் முக்கிய விடயம் என்னவெனில - இவ் தேர்தல்வாதிகளை நம்பி தமிழ் மக்கள் ஏமாறாது, வடக்கு கிழக்கில் சிவில் சமூகத்துடன் இணைந்து பயணிக்க வேண்டும்.
சிவில் சமூகம் என்று கூறும்பொழுது, உலக நியதிகளிற்கு அமைய – அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டாளர்கள், வழங்கறிஞர்கள், சமய - சமூக செயற்பாட்டாளர்கள், கல்விமான்கள் போன்றவர்களுடன் துர்அதிஸ்டவசமாக நாடாளுமன்ற உறுப்பினர்களும்,தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில், தேர்தல்வாதிகளும் காணப்படுகின்றனர்.
ஆனால் சிவில் சமூகம் என்று பயணிக்கும் வேளையில், ஐக்கியம் குழு முடிவிற்கு அப்பாற்பட்ட தேர்தல்வாதிகளின் செயல்கள், சிவில் சமூகத்திடம் செல்வாக்கு பெற முடியாது.
சிவில் சமூகத்திற்கு பொய்யும் புரட்டும் சொல்லும் தேவையோ அவசியமோ கிடையாது. காரணம் அவர்கள் மக்களின் நலன்களில் மட்டுமே அக்கறை கொண்டவர்களே தவிர, அவர்களது வாக்குகளில் அல்ல.
உலகில் பல நாடுகளில், ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளுக்கு சவாலாக உள்ளவர்கள் சிவில் சமூகத்தினரே.
வடக்கு கிழக்கு வாழ் மக்களின் அரசியல் அணுகுமுறை இன்று தள்ளாடி செல்லும் நிலையில், சிவில் சமூகமே முக்கிய பங்கு வகிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
பொதுவாக வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மட்டும் அல்லாது, மலையக தமிழ் மக்களும் கடந்த எழுபது வருடங்களாக சொல்லனா துன்பங்களை எதிர்கொண்டு வருகிறார்கள் என்பதை இங்கு நான் கூறி தான் அரசியல்வாதிகளோ, தேர்தல்வாதிகளோ தெரிந்து அறிந்திருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை.
இதை வேறுவிதமாக கூறுவதனால், தமிழீழ விடுதலை புலிகளின் காலம் தவிர்ந்த மற்றைய காலம் யாவும், அரசியல் தேர்தல் என்ற பெயரில், ஒருவரை ஒருவர் குறை கூறுவதை தவிர்த்து தமிழ்மக்களிற்கு எதையும் உருப்படியாக பெற்று கொடுத்தது என்ற கதைக்கு இடமேயில்லை.
அப்படியானால், இவர்கள் ஏன் தேர்தலை விரும்பினார்கள், விரும்புகிறார்கள்? இவர்கள் தேர்தலில் ஜெயித்து என்ன செயதார்கள் செய்ய போகிறார்கள்;? போன்ற பல வினாக்களிற்கு விடை அறவே கிடையாது.
பதின்மூன்றாம் திருத்த சட்டம்
அதிஸ்டவசமாகவோ, துர்அதிஸ்டவசமாகவோ - இந்தியாவின் இடையூறினால், இலங்கை இந்திய உடன்படிக்கையின் அடிப்படையில், பதின்மூன்றாம் திருத்த சட்டம் என்று ஒன்று கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளிற்கு மேலாக சிங்கள பௌத்த அரசியல் யாப்பில் இடம்பெற்றுள்ளது.
தமிழீழ விடுதலை புலிகளின் காலத்தில், அங்கு ஓர் ஆயுத போராட்டம் வெற்றியுடன் நடந்த காரணத்தினாலும், தமிழீழ விடுதலை புலிகளிற்கு தாரளமான மக்கள் ஆதரவு இருந்த காரணத்தினாலும், இவ் பதின்மூன்றாம் திருத்த சட்டம் பற்றிய உரையாடலை, முக்கிய பேச்சு பொருளாகவோ முன் வைக்க வேண்டிய தேவை யாருக்கும் இருக்கவில்லை என்பதை தேர்தல்வாதிகள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
இப்பொழுது சூடுபிடித்துள்ள பதின்மூன்றாம் திருத்த சட்டம் பற்றிய உரையாடல்கள் யாவும், மக்களிற்கு ஓர் குழப்பமான நிலையை தேர்தல்வாதிகளினால் உருவாக்கப்பட்டுள்ளது.
காரணம் பதின்மூன்றாம் திருத்த சட்டத்தை ஆதரிப்பவர்கள், இது தமிழ் மக்களிற்கான ஓர் நிரந்தர தீர்வென கூறியது கிடையாது என்பதை இவ் தேர்தல்வாதிகள் அறிந்திருக்கவில்லை போலும்.
மேலாக, இதன் மூலம் வடக்கு கிழக்கில் நடைபெற்று கொண்டிருக்கும் அல்லது எஞ்சியிருக்கும் - இராணுவமயம், சிங்களமயம், பௌத்தமயம், சிங்கள குடியேற்றங்களுடன் தொல்பொருள் ஆராய்ச்சியின் பெயரில் நடைபெறும் மாயா ஜாலங்களிற்கு ஓர் எதிர்மறையை தோற்றுவிக்க முடியும் என்பதை தேர்தல்வாதிகள் மறுக்க முடியாது.
பதின்மூன்றாம் திருத்த சட்டத்தை தற்காலிகமாகவும் ஏற்க முடியாது என்று கூறும் தேர்தல்வாதிகள், பதின்மூன்றை ஏற்று கொண்ட பின்னரும், வேறு அரசியல் தீர்வை தேட, முன்வைக்க முடியும் என்பதற்கு உலகில் பல உதாரணங்கள் உண்டு என்பதையும் அறிந்திருக்கவில்லை போலும்.
இதே இடத்தில், ஒற்றையாட்சிக்கு வெளியில் ஓர் சமஷ்டியை என்று உருவாகவுள்ளது? இதை எப்படியாக? யாரின் உதவியுடன்? சிங்கள பௌத்த நாடாளுமன்றத்தில் அரங்கேற்றுவார்கள்? தற்போதைய வடக்கு கிழக்கு வாழ் அவலநிலையில், இதன் கால அட்டவணை என்ன? என்ற கேள்விகளிற்கு இவர்களால் மக்களிற்கு பதில் சொல்ல முடியுமா?
மக்களை ஆண்டியாக்க முனைகிறீர்கள்..!
இவற்றுக்கு பதில் கூற முடியாதவர்கள், சுருக்கமாக கூறுவதனால், வடக்கு கிழக்கு வாழ் மக்களை, அவர்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக, சந்ததி சந்ததியாக வாழ்ந்த தமது தாயக நிலங்களிலேயே ஆண்டியாக, சிங்கள பௌத்தர்களாக, வாழ வழி சமைக்கிறார்கள் என்பதே உண்மை.
இவர்களது செயற்பாடுகள் யாவும், வடக்கு கிழக்கில் தமிழினம் அழிந்து போவதற்கான முன்கூட்டிய செயற்பாடுகளாகவே காணப்படுகிறது.
இங்கு பிரபல்யமான ஊடகவியலாளர் ஒருவர் கூறிய ஓர் சுவாரசியமான கதையை கூற விரும்புகிறேன்.
வடக்கு கிழக்கு வாழ் மக்களிற்கு பதின்மூன்றாம் திருத்த சட்டம் வேண்டாம், சம்ஷ்டி தான் தீர்வென கூறுபவர்கள் என்ன கூறுகிறார்களெனில்,“உங்களிற்கு பட்டுவேட்டி சால்வை தருவோம், அது கிடைக்கும் வரை நீங்கள் யாவரும் நிர்வாணமாக இருங்கள்”என்பதற்கு ஒப்பானது என நகைச்சுவையாக கூறியுள்ளார்.
இன்று தமிழீழ விடுதலை போராட்டம் மௌனிக்கப்பட்டு ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் உருண்டு ஓடி, வடக்கு கிழக்கு வாழ் மக்கள் கண்ட மிச்சம், என்னவென நாம் ஆராய்வோமானால், அதாவது பாதிக்கப்பட்ட மக்களிற்கு ஐ.நா.மனித உரிமை சபையில் படிப்படியாக முன்னேறி வரும் இலங்கை மீதான தீர்மானமும், கனடாவில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலையாளிகளிற்கு எதிரான நடவடிக்கைகளை தவிர்த்து, வேறு ஒன்றும் கிடையாது என்பதே யதார்த்தம்.
இவை தவிர்ந்து எதையும், எந்த தமிழ் அரசியல்வாதியோ, எந்த தேர்தல்வாதியோ அல்லது புலம்பெயர் வாழ் தமிழரோ, எந்தவொரு நாட்டையும் எமக்கு ஆதரவாக மாற்றியதாக சரித்திரமே கிடையாது.
இதில் இந்தியாவை எமக்கு ஆதரவான நாடாக பார்க்க முடியாதுவென சிலரினால் கூறப்பட்டாலும், வடக்கு கிழக்கு வாழ் மக்களின் இன்றைய நிலையில் கடும் கரிசணை கொண்ட நாடாக நாம் இந்தியாவை நிச்சியம் பார்க்க முடியும்.
இந்த நிலையில், “எனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு சகுனம் பிழைத்தால் போதும்”என்ற நிலைப்பாட்டை தேர்தல்வாதிகள் எடுத்திருப்பது, வடக்கு கிழக்கு வாழ் மக்களின் எழுச்சிக்கு மாறாக, அழிவிற்கே வழிவகுக்கவுள்ளது.
மிக அண்மையில், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுடன், ஐ.நா.மனித உரிமை சபையில் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்த பொழுது - சிறீதரன் தான் பதின்மூன்றாம் திருத்த சட்டத்திற்கு எதிரானவரென்றும், தான் இந்தியாவின் பிரதமர் மோடி கூறிய, கூட்டுறவு சமஷ்டியையே ஆதரிப்பதாக கூறினார்.
அப்பொழுது நான் அவரிடம் மேலே கூறப்பட்டது போன்ற சில வினாக்களை முன் வைத்த வேளையில், அவரினால் அவற்றிற்கு ஒழுங்கான பதில்கள் கூற முடியவில்லை.
உண்மை என்னவெனில், மறைந்த இந்தியாவின் பிரதமர் இந்திராகாந்தி இன்று உயிருடன் இருந்திருந்தால், சில வேளைகளில் தமிழீழமே மலர்ந்திருக்கும்.
இதேபோன்று, மோடி உரையில் கூறியது யாவும், என்று எப்பொழுது சிங்கள பௌத்தவாதிகளிடம் நடைமுறைக்கு சாத்வீகம் என்பதை, சிறீதரன் போன்றவர்கள் சிந்திக்க வேண்டும்.
சமஷ்டி தீர்வும் மூன்றில் இரண்டும்
முக்கியமாக இலங்கையில் ஓர் சமஷ்டி தீர்வு, சிங்கள பௌத்த அரசியல்வாதிகளின் மூன்றில் இரண்டு ஆதரவுடன், நாடாளுமன்றத்தில் தீர்மானம் உருவாகுவதற்கான நேர அட்டவணை பற்றி, யாரும் பதில் கூற முன்வராத பொழுது, இவை யாவும் மக்களை முட்டாளாக்கும் கருத்தாகவே காணப்படுகிறது.
மீண்டும் இது தேர்தல்வாதிகளின் வழமையான சழப்பல் கதையே.
தற்பொழுது இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனதிபதியின் கருத்திற்கு அமைய – தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்விற்கு இரண்டு விடயங்களே சாத்வீகமானது.
ஒன்று இலங்கையின் அரசியல் யாப்பில் உள்ள பதின்மூன்றாம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது, அல்லது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டு, பதின்மூன்றாம் திருத்த சட்டத்தை இலங்கையின் அரசியல் யாப்பிலிருந்து நீக்குவது.
இங்கு பதின்மூன்றாம் திருத்த சட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டால், தமிழீழம் உருவாகிவிடும் என்ற கருத்தை கொண்டு எதிர்க்கும் சிங்கள தீவிரவாத அரசியல்வாதிகளிற்கும், பதின்மூன்றாம் திருத்த சட்டத்தை விரும்பாத வடக்கு கிழக்கு வாழ் தேர்தல்வாதிகளிற்கும் இடையில் ஓர் சமநிலை காணப்படுவதை நாம் உணர முடிகிறது.
ஆகையால், இந்த சர்ச்சையை இலகுவாக தீர்பதற்கு, பதின்மூன்றாம் திருத்த சட்டத்தை நீக்குவதற்காக, இதற்கு எதிரான தமிழ் தேர்தல்வாதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களும், சிங்கள தீவிரவாத அரசியல்வாதிகளும் ஒன்றுபட்டு இதை நீக்கினால், தமிழர்களிற்கான தீர்வில், பதின்மூன்று என்ற கதையே தொடர்ந்து இருக்க முடியாது.
இதன் பின்னர், இவ் தேர்தல்வாதிகள், தமது கனவு கன்னியான ஓற்றையாட்சிக்கு வெளியில், சமஷ்டியை நிறைவேற்றி, வடக்கு கிழக்கு வாழ் மக்களின் மனங்களை குளிர வைக்க முடியும்.
அவ்வேளையில், “மண்ணில் உங்கள் பெயரும் விளங்கும்.உங்கள் கழுத்தில் மாலையும் குலுங்கும்” என்னை பொறுத்தவரையில், வடக்கு கிழக்கு வாழ் மக்கள், 1977ஆம் ஆண்டு தேர்தலில் பெரும்பான்மையாக வாக்களித்த, நிரந்தர தீர்வான தனி நாடான ‘தமிழீழம்’ என்பதில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை.
ஆனால், எமது முன்னோர் கூறிய அறிவுறுத்தலிற்கு அமைய, “எமது இலட்சியத்தை அடைவதற்கான மாற்று வழிகளை கையாளுவதே இன்றைய இராஜதந்திரமாகிறது”.
இவற்றை மக்களின் வாக்குகளை பெறுவதற்காக பொய்யும் புரட்டும் விதண்டாவாதமும் செய்யும் தேர்தல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
இறுதியாக,வடக்கு கிழக்கு வாழ் மக்கள் யாவரும் தேர்தல்வாதிகள் போல் அலங்கரிக்கப்பட்ட வீடுகளிலும், மாடிவீடுகளும், ஊருக்கு ஊர் வீடுகளும், குளிரூட்டப்பட்ட வீடுகளும் வாகனங்களும், பங்கு சந்தையிலும், வங்கிகளிலும் பணம் இருப்பில் கொண்டவர்கள் அல்ல.
பலர் நாளாந்த ஊதியத்தில் குடும்பம் நடத்துபவர்களும், குடிசை வீடுகளிலும் வாழுவதுடன், தமது நிலங்கள் சொத்து பத்து சுகங்களை குடும்பத்தவர் உறவினர்களை இராணுவத்தின் கெடுபிடிகளினால் இழந்து வாழ்பவர்கள்.
ஆகையால் நீங்கள் கூறும் கற்பனை சமஷ்டி வந்து, அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வரை, அவர்கள் காற்றையும் தண்ணீரையும் குடித்து இன்னல்களை எதிர்க்கொள்ள முடியாது.
இவ் யதார்த்தங்களை தேர்தல்வாதிகளாகிய நீங்கள் உணர வேண்டுமென கேட்டுக்கொள்ளும் அதேவேளை, தயவு செய்து அப்பாவி மக்களில் தொடர்ந்து சவாரி செய்வதை நிறுத்துங்களென கேட்டு கொள்ளுகிறேன்.
சிறுபிள்ளைகளின் மண் விளையாட்டு போல், ஆளுக்கு ஒரு அரசியல் கட்சியும், ஆளுக்கு ஒரு கொள்கையும், நாளுக்கு நாள் யாழ் ஊடக மையத்தில் விதண்டாவாதம் பேசி, நொந்து நிற்கும் மக்களை தொடர்ந்து துன்புறுத்தாதீர்களெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழர்களிற்கு காத்திருக்கும் பேராபத்து!! சுமந்திரனின் நெருங்கிய சகா திடீர் பல்டி என இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் லங்காசிறி ஊடகத்திற்கு பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனர் ச.வி.கிருபாகரன் குறிப்பிட்ட முக்கிய கருத்துக்கள்

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
