சுட்டெரிக்கும் வெயில் : மக்களை வாட்டி வதைக்கும் வெப்பம்
மத்திய மலைநாட்டில் தற்போது கடுமையான வெப்பம் நிலவுவதால் நீரேந்தும் பகுதிகளில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
குறிப்பாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் மற்றும் சென் கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
குறைந்துள்ள நீர்மட்டம்
தொடர்ந்து இந்தப்பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவுவதால் சகல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் மேலும் குறையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன்காரணமாக பெருந்தோட்ட பகுதிகளில் சுத்தமான குடிநீருக்கு பாரிய அளவில் தட்டுப்பாடு நிலவி வருகிறது மேலும் விவசாய நடவடிக்கைகளுக்கு நீரைப் பெறுவதில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் நிலவும் தொடர்ச்சியான அதிக வெப்பம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்வில் சற்று தழம்பல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக சிறியவர்கள், வயோதிபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை(27.03.2026) நண்பல் வேளையில் மட்டக்களப்பு நகரின் முக்கியமான பகுதிகள் வெறிச்சோடி காணப்படுவதை அவதானிக்க முடிவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலதிக தகவல் - ருஷாத்








