93 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை ஈட்டிய பாரியளவு பணம்.. வரலாற்றில் பதிவான அநுரவின் செயல்!
இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம், 2025 ஆம் ஆண்டில் 2,203 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது.
93 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஈட்டப்பட்டுள்ள இந்த வருமானம் பெரும் சாதனையாக பார்க்கப்படுகின்றது.
இதன்படி நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்கை விட 33 பில்லியன் ரூபாய் மேலதிகமாக ஈட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 15 சதவீத அதிகரிப்பு என உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ருக் தேவி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் விஜயம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று (30) இறைவரித் திணைக்களத்தின் கேட்போர் கூடத்திற்கு நேரில் சென்று ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

இதன்போது, உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் 93 ஆண்டுகால வரலாற்றில் ஜனாதிபதி ஒருவர் அங்கு விஜயம் செய்தமை இதுவே முதல் தடவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அரசாங்கம் எதிர்பார்த்த இலக்கை விட அதிக வருமானத்தை ஈட்டிக்கொடுத்தமைக்காக திணைக்களத்தின் அனைத்து அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் ஜனாதிபதி தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 2025ஆம் ஆண்டின் முன்னேற்றம் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான புதிய திட்டங்கள் குறித்தும் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டுள்ளது.