கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியாவின் பதிலை இலங்கை எதிர்பாக்கிறது: ரணில் விக்ரமசிங்க
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியாவின் பதிலை இந்த மாத இறுதியில் பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடனான பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
செய்தித்தாள்களின் ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடக செய்திப் பணிப்பாளர்களுடன் நேற்று (06.01.2023) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி இந்த ஆண்டின் முதல் பாதியில் கிடைக்கும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வழங்கிய கடனைத் தள்ளுபடி செய்யுமாறு சீனாவிடம் கோரிக்கை விடுக்கப்படவில்லை என்றும், ஆனால் 20 வருட காலத்திற்குள் கடனைத் திருப்பிச் செலுத்த கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நிதியுதவிகள்
இதற்கு சீனாவிடமிருந்து நல்ல பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நீடிக்கப்பட்ட கடன் வசதியைப் பெற்ற
பின்னர், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி
நிறுவனங்களும் இலங்கைக்கான நிதியுதவிகள் தொடர்பில் ஏற்கனவே சாதகமாக
பதிலளித்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.



