அதள பாதாளத்தில் இலங்கை! 2029 வரை நீடிக்கவுள்ள ஆபத்து
2029ஆம் ஆண்டு வரை நாம் கடன்களை செலுத்த வேண்டியிருப்பதால், 2029ஆம் ஆண்டு வரை டொலர் நெருக்கடி நீடிக்கும் என்ற கருத்து தெரிவிக்கப்படுகின்றது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
2020ஆம் ஆண்டில் எம்மிடம் இருந்த கையிருப்பை விட அதிகளவு கடன்களை செலுத்தினோம். 2021ஆம் ஆண்டும் இதே நிலைமையே காணப்பட்டது. அதன் ஊடாக நாம் கையில் இருக்கின்ற இருப்பை தாண்டி எமக்கு வரவிருக்கின்ற நிதி மூலங்களையும் கணக்கில் எடுக்க வேண்டும்.
நிச்சயமாக 2022ஆம் ஆண்டில் செலுத்தப்பட வேண்டிய கடன் முறையாக செலுத்தப்படும். இருக்கின்ற கையிருப்பை தாண்டி புதிதாக டொலர் வருமானத்தைப் பெற்று கடன்களை முறையாக செலுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி - தற்போது நாட்டில் சமையல் எரிவாயு, பால்மா, சீமெந்து போன்ற பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறதே?
பதில் - சீமெந்துக்கான கேள்வி அதிகரித்திருக்கின்றது. பாரியளவில் நிர்மாணப்பணிகள், அபிவிருத்தித் திட்டங்கள் நாட்டில் முன்னெடுக்கப்படுகின்றன.
அவ்வாறு நிர்மாணப்பணிகள் இடம்பெறும்போது சீமெந்துக்கான கேள்வி அதிகரிக்கும். அதாவது கேள் அதிகரிக்கும் போது எம்மால் பொருட்களை விநியோகிக்க முடியாமல் போகும்.
பால்மாவைப் பொறுத்தவரையில் விலை அதிகரிக்கப்படாததினால் வர்த்தகர்கள் அவற்றை இறக்குமதி செய்யவில்லை. அதனால்தான் இவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனினும் தற்போது இறக்குமதிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உலகில் பால்மா, நிலக்கரி, எரிபொருள், உணவுப்பொருட்கள் போன்றவற்றின் விலைகள் அதிகரித்திருக்கின்றன.
அமெரிக்காவில் 40 வருடங்களின் பின்னர் பணவீக்கம் அதிகரித்திருக்கின்றது. அவ்வாறு உலக சந்தையில் பொருட்களின் விலை அதிகரிக்கும் போது உள்நாட்டில் அந்த பொருட்களின் விலை அதிகரிக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும். இல்லாவிடின் வர்த்தகர்கள் இறக்குமதி செய்ய தயங்குவார்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களில் தான் தட்டுப்பாடு ஏற்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
