இந்தியாவிற்கு கடன்பட்டுள்ள இலங்கை: ஹரின் பெர்ணான்டோ கருத்து
இந்தியாவிற்கு இலங்கை கடன்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்றைய தின (21.02.2024) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“அண்மைக்கால இக்கட்டான காலங்களில் இலங்கைக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது. இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை அனுப்பியதற்காக இந்தியாவுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
இலங்கையின் சகோதரன்
இந்தியா தனது முதல் வெளிநாட்டு விருந்தகத்தை அமைக்கத் தொடங்கியுள்ளது. இந்தநிலையில் தம்மை குறைக் கூறுபவர்கள் இது போன்ற முதலீடுகளைத் தடுக்கவே விரும்புகின்றனர்.
எனினும், இந்தியா, இலங்கைக்கு சகோதரனாக இருப்பதோடு இந்தியாவும் இலங்கையும் பாரம்பரியமாக இணைக்கப்பட்டவை.
இது தொடர்பில் அரசியலமைப்புச் சட்டத்தை மீறியதாக யாரேனும் தம்மீது குற்றம் சாட்டி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லட்டும்.
இணையப் பாதுகாப்புச் சட்டம்
நீதித்துறையின் முன் வாதிட நான் தயாராக உள்ள அதே சமயம் மும்பையில் நடந்த வீதிக்கண்காட்சியில் தான் பேசிய 15 நிமிட பேச்சு செம்மை செய்யப்பட்டு திரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
சமூக மற்றும் மின்னணு ஊடகங்களில் அறிக்கையைத் திருத்துவதும் திரிப்பதும் சகஜமான விடயங்களாகும்.
எனவே, இன்று இலங்கைக்கு இணையப் பாதுகாப்புச் சட்டம் தேவைப்படுவதற்கு இதுவே காரணம்” என வலியுறுத்தியுள்ளார்.