ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை - சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் என்ற தொனிப்பொருளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய தீர்மானத்தின் வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியடைந்தது.
இந்நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான தற்போதைய மற்றும் முன்னாள் அரச அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, சுதந்திரமாகவும், நடுநிலையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இலங்கை மத்திய வங்கி
இதேவேளை, மனித உரிமைகள் பேரவையின் இந்த தீர்மானங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிடம் வினவப்பட்டது.
அதற்கு பதிலளித்தவர், இந்த இரண்டு விஷயங்களுக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம்
இந்த விடயம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் மனித உரிமைகள் ஆணையம் எவ்வித தொடர்பும் கொள்ளவில்லை என்பது எங்களுக்குத் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்படும் எந்தவொரு விடயம் குறித்தும் மத்திய வங்கி அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படவில்லை.
ஐ.நா சபை என்பது தனியான ஒன்று. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் நடைமுறை வேறுபட்டது. இரண்டிற்கும் இடையில் எவ்வித தொடர்பையும் நாங்கள் பார்க்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.