அநுர அரசுக்கு எதிராக இருமுனைத் தாக்குதல் : எதிரணிகள் வியூகம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிரான போராட்டத்தை தனித்தும், கூட்டாகவும் முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன உள்ளிட்ட எதிரணியிலுள்ள சில கட்சிகள் இணைந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையில் நுகேகொடையில் கடந்த 21 ஆம் திகதி கூட்டத்தை நடத்தி இருந்தன.
ஜனவரியில் அரசுக்கு எதிராகப் பாரிய போராட்டம்
இந்தக் கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திப பங்கேற்கவில்லை.
எனினும், எதிர்வரும் ஜனவரி மாதமளவில் அரசுக்கு எதிராகப் பாரிய போராட்டமொன்றை நடத்துவதற்கு அந்தக் கட்சி திட்டமிட்டுள்ளது என அறியமுடிகின்றது.
அதேவேளை, நாடு முழுவதும் ஆயிரம் கூட்டங்களை நடத்துவதற்கு உத்தேசித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி அதன் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக டிசம்பரில் இரு கூட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகின்றது.

இதற்கு முன்னதாக எதிர்வரும் 8 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் விசேட நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது.
அதேபோல் எதிரணியிலுள்ள ஏனைய சில கட்சிகளும் சில கூட்டங்களை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளன.
முக்கிய தருணங்களில் இணைந்து கூட்டங்களை நடத்துவதற்கும் பச்சைக்கொடி காட்டியுள்ளன. இதற்கிடையில் தேசிய மக்கள் சக்தி அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டமொன்றை நடத்த வேண்டும் என்ற யோசனை ஆளுங்கட்சியிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.