இலங்கையில் கொட்டிக் கிடக்கும் இரத்தினங்கள்! வருமானம் மட்டும் குறைவு
இரத்தினங்கள் நிறைந்த நாடான இலங்கையில் வருமானம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது என்று கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன(Ramesh Pathirana) தெரிவித்துள்ளார்.
சர்வதேச இரத்தினக்கல் , ஆபரண வர்த்தக நிலையத்தை (இரத்னபுரி இரத்தினக்கல் கோபுரம்) இன்று (04) காலை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
குறைந்துள்ள வருமானம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
2021 ஆம் ஆண்டு நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச இரத்தினக்கல் வர்த்தக நிலையம் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படுகிறது.
இரத்தினக்கல் வர்த்தகர்களுக்கு அத்தியாவசியமாக காணப்பட்ட இந்த கட்டிடம் திறக்கப்பட்டதன் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணி விரைவாகப் பெருகும்.
இரத்தினக்கல் வியாபாரிகள் எதிர்நோக்கும் பல்வேறு சிரமங்கள் குறித்து இம்மாவட்டத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு விரைவான தீர்வுகளை வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.
இந்த வியாபார நிலையத்தின் ஊடாக வருடத்திற்கு இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது அதனை விடவும் அதிகமான வருமானம் ஈட்டு முடியுமென என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு இரத்தினக் கல் கூட இல்லாத ஹொங்கொங் இராச்சியம், இரத்தின கற்களை மீள் ஏற்றுமதி செய்வதன் மூலம் ஆண்டுக்கு 12 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டுகிறது.
அதேபோல் தாய்லாந்து வருடாந்தம் 06 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டுகிறது. ஆனால் இரத்தினங்கள் நிறைந்த நாடான இலங்கையில் வருமானம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.
அதனால் தாய்லாந்து மற்றும் ஹொங்கொங் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சுதந்திர வர்தக முறைமைகளை பலப்படுத்துவது காலோசிதமானதாக அமையும். ஜனாதிபதியும் அந்த பொருளாதார முறைமைகளை ஏற்றுகொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |