வாகன உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தும் வர்த்தமானி அறிவித்தல்!
இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தும் வகையிலான மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
துறைசார் பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வாகன உதிரிப் பாகங்கள்
அதனடிப்படையில் வாகன உதிரிப் பாகங்கள், தெரிவுசெய்யப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறை உள்ளிட்ட பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு 2,000 பொருட்களுக்கான இறக்குமதிக்கு தடை விதிப்பதற்கு கடந்த ஆகஸ்ட் 23ஆம் திகதி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நீக்கப்படும் கட்டுப்பாடுகள்
அவற்றில் 700 பொருட்களுக்கான இறக்குமதி தடை, கடந்த செப்டெம்பர் 09ஆம் திகதி தளர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இறக்குமதியாளர்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.