அடுத்த வருடத்தில் குறையவுள்ள அரச ஊழியர்களின் ஊதியம்
அரசாங்க ஊழியர்களின் சம்பள பணம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா முக்கிய அறிவிப்பொன்று வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்தினால் இந்த வருடம் அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக 420 பில்லியன் ரூபா செலவிடப்பட்ட போதிலும், அடுத்த வருடம் அது 380 பில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதற்கேற்ப அரசு ஊழியர்களின் சம்பளம் அடுத்த வருடத்திற்கான பட்ஜெட்டில் குறைக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாடு திவாலாகும் போது 70 அமைச்சர்கள் தேவையா
இதேவேளை, ஜனாதிபதிக்கும் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேலும் பல அமைச்சர்களை நியமிக்க தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாடு திவாலாகும் போது நாட்டுக்கு 70 அமைச்சர்கள் தேவையா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும்,பொருட்களின் விலையை அதிகரித்து அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதனால் ஜனவரி மாதத்திற்கு பின்னர் நாடு பாரிய நெருக்கடியை சந்திக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.