அரச நிறுவனங்களுக்கு இடையில் பணப்பரிவர்த்தனைக்கு டிஜிட்டல் வழிமுறை
அரசாங்க நிறுவனங்களுக்கு இடையில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள சிறப்பு டிஜிட்டல் முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன(Eranga Weeraratne) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரச நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் அனைத்து கொடுப்பனவுகளும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட உள்ளன.
GovPay சிறப்பு டிஜிட்டல் திட்டம்
அதற்காக ‘GovPay’ எனப்படும் சிறப்பு டிஜிட்டல் திட்டம் உத்தேசிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் குறித்த திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) வருடாந்த 1% முதல் 1.5% வரை பணத்தாள்கள் கொடுக்கல் வாங்கல்களுக்காக வீணாக செலவிடப்படுகிறது. பணத்தைப் பயன்படுத்தி செலுத்தப்படும் கொடுப்பனவுகள் மோசடி மற்றும் ஊழலை அதிகரிப்பதற்கும், பணம் செலுத்தும் செயல்பாட்டில் திறமையின்மைக்கும் வழிவகுக்கிறது.
அதனால் அரச நிறுவனங்கள் அனைத்தும் டிஜிட்டல்மயப்படுத்தப்பட உள்ளன. அரச நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளையும் டிஜிட்டல் மயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த மாற்றத்தை எளிதாக்கும் வகையில் ‘GovPay’ மொபைல் அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 16 அரசு நிறுவனங்கள் இந்த அப்ளிகேஷனில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ஏனைய நிறுவனங்கள் ஜனவரி முதல் இணைக்கப்படும்.
இந்த முன்முயற்சியானது அரசாங்கப் பணம் முழுவதையும் டிஜிட்டல் மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் பொதுச் சேவைகளின் செயல்திறன் மேம்படும்.
டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிப்பது மனித உழைப்பைக் குறைக்கும், முறைகேடுகள் மற்றும் ஊழலை அகற்ற வழிவகுக்கும் என்பதுடன் பொதுமக்களுக்கு வசதியான சேவைகளை வழங்கும் என தெரிவித்துள்ளார்.