இலங்கை ஆளுகை கண்டறியும் மதிப்பீட்டு அறிக்கை வெளியிட்டுள்ள தகவல்
2023 செப்டெம்பரில் வெளியிடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின், இலங்கை ஆளுகை கண்டறியும் மதிப்பீட்டு அறிக்கையில், உயர் அதிகாரிகளின் நடத்தைகளே ஊழல் பொருளாதார நெருக்கடிக்கு வழி வகுத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியின் கீழ் குறிப்பிட்ட அதிகார அமைப்பு தனித்துவமான நிர்வாக சவால்களை உருவாக்கியது என்று அந்த மதிப்பீடு தெரிவித்துள்ளது.
குடும்ப உறவுகளால் இறுக்கமாக இணைக்கப்பட்ட குழுவின் கைகளில் அதிகப்படியான அதிகாரம் குவிந்திருந்தமையானது, பொது அதிகாரத்தை ஒருங்கிணைக்கப்பட்ட முறையற்ற பயன்பாட்டிற்கு உதவியது.
பொருளாதார நெருக்கடி
கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் மூன்று வருடங்களுக்கும் குறைவான காலமே ஆட்சியில் இருந்த போதிலும், அதன் பதவிக்காலத்தில் வரி வருமானத்தில் பேரழிவுகரமான சரிவு காணப்பட்டது, முதலீட்டு ஒப்பந்தங்கள் ஒளிபுகா சூழ்நிலையில் அரச சொத்துக்கள் மீதான கட்டுப்பாட்டை வழங்கியது.
அத்துடன் விரிவான நீண்ட கால சலுகைகளை வழங்கியது. வெளி மற்றும் உள்நாட்டு கடனில் வியத்தகு அதிகரிப்பும் ஏற்பட்டது.
எவ்வாறாயினும், கடந்த கால ஏற்பாடுகள் மற்றும் நிறுவனங்களை எளிமையாக மீட்டெடுப்பதற்கான விக்ரமசிங்க அரசாங்கத்தின் முயற்சிகள்,ஊழல் பிரச்சினைகளை எதிர்கொள்ள போதுமானதாக இருக்கவில்லை என்று ஆளுகை கண்டறியும் மதிப்பீட்டைத் தயாரித்த சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
ஊழலை பற்றி கேட்கும் வரை அதனை ஒரு முக்கியமான பிரச்சினையாக பார்க்கவில்லை என்றும், அதை நாட்டின் வழக்கமான நிர்வாகத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டதாக தெரிவதாகவும், குறித்த மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழல் விவகாரங்கள்
அதிக மதிப்புள்ள ஊழல் விவகாரங்கள் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுடன் வலுவாகத் தொடர்புடையதாகத் தோன்றுகின்றன.
ஆளுகை கண்டறியும் மதிப்பீட்டின்படி, ஒட்டுமொத்தமாக, தற்போதைய ஏற்பாடுகள் உயர்மட்ட அரசாங்க அதிகாரிகளை பொறுப்புக்கூறலில் இருந்து தனிமைப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சி மற்றும் ஊழல் விவகாரங்கள் தேசிய மற்றும் சமூக நலனை சீர்குலைத்துள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ள குறித்த மதிப்பீடு, அண்மைக்காலம் வரை உயர் அதிகாரிகளின் கேடுகெட்ட நடத்தைக்கு கூட தண்டனைகள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் 16 பரிந்துரைகளை குறித்த மதிப்பீடு வெளியிட்டுள்ளது. இதன்படி 2025-2029க்கான தேசிய ஊழல் எதிர்ப்புத் திட்டத்தை இலங்கை உருவாக்க வேண்டுமென ஆளுகை கண்டறியும் மதிப்பீடு பரிந்துரைக்கிறது.
அரசாங்க இணையதளத்தில் ஒழுங்குமுறை தேவைகளுக்கு ஏற்ப மூத்த அதிகாரிகளின்
குறிப்பாக ஜனாதிபதி, பிரதமரின் சொத்து அறிக்கைகளை பொதுவில் கிடைக்கச்
செய்யுமாறும் அது அழைப்பு விடுக்கிறது.