அநுரவினால் மட்டும் முடியாது! பொறுப்பை வலியுறுத்தும் பிரதமர் ஹரினி
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திறமையானவராக இருந்தாலும் அவரால் மட்டும் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மஹரகமவில் இன்று (19) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சிறந்த அணி தேவை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
75 வருடங்களாக இந்த நாட்டில் ஆட்சியில் இருந்த எவரும் தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் கிடைக்கும் என்று நினைக்கவில்லை. அந்த அதிகாரத்தை மக்கள் எமது குழுவிற்கு வழங்கியுள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திறமையானவராக இருந்தாலும், அவரால் மாத்திரம் நாட்டைக் கட்டியெழுப்புவது கடினம். அதற்கு இம்முறை நல்லதொரு அணியை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவது மக்களின் பொறுப்பாகும்.
வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்பதற்கு வலுவான அமைச்சரவை மற்றும் முற்போக்கான நாடாளுமன்றம் அவசியம். மேலும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வேண்டாம் என்று கூறிய போதிலும், அவர்களில் பாதி பேர் தாமாக முன்வந்து இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து விலகியுள்ளனர்.
எனவே நாட்டின் தரத்தை மாற்றியமைக்கும் குழுவொன்றை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யும் சந்தர்ப்பம் தற்போது மக்களிடம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.