மூன்று அமைச்சர்களின் கையில் நாடு! அநுர அரசாங்கத்தின் மிக முக்கிய தீர்மானங்கள்
100இற்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பிரச்சினைகளிற்கு தீர்வை காணத்தவறிய சூழ்நிலையில் மூன்று அமைச்சர்கள் மாத்திரம் இன்று இந்த நாட்டை நிர்வகிக்கின்றோம் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னரான இந்த ஐந்து வாரங்களில் நாங்கள் மிக முக்கிய தீர்மானங்களை மாத்திரமே எடுத்துள்ளோம் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
ஐந்து வருட திட்டம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என சில அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றனர். அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிகளை ஐந்து வருடங்களிற்காகவே சமர்ப்பித்தது. ஐந்து மாதங்களிற்காக இல்லை. ஐந்து வருடகாலத்தில் பூர்த்தி செய்வதற்காகவே அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை சமர்ப்பித்தது.
சஜித்பிரேமதாச போன்ற சில அரசியல்வாதிகள் வேண்டுகோள் விடுப்பது போல ஐந்து வாரங்களிற்குள் அவற்றை நிறைவேற்ற முடியாது.
நாங்கள் மேலும் தீர்மானங்களை எடுக்க வேண்டும், ஐந்து வருடங்களிற்குள் நிறைவேற்றுவதற்கு தீர்மானித்த விடயங்களை ஐந்து வருடங்களிற்குள் பூர்த்தி செய்ய முடியாது.
நாங்கள் இன்னமும் அரசாங்கத்தை கூட அமைக்கவில்லை, கடந்த ஐந்து வாரங்களில் மிக முக்கியமான தீர்மானங்களை மாத்திரம் எடுத்தோம்.
100இற்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பிரச்சினைகளிற்கு தீர்வை காணத்தவறிய சூழ்நிலையில் மூன்று அமைச்சர்கள் நாட்டை நிர்வகிக்கின்றோம்.
நாங்கள் புதிய பாதையில் பயணிக்கின்றோம் என்பதை காண்பித்துள்ளோம், நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படுவதற்கு ஊழல் அரசியல் கலாசாரம் ஊழல் போன்றவையே காரணம் என குறிப்பிட்டுள்ளார்.